இலங்கையில் 7,674 டெங்கு நோயாளர்கள் : 4 பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, May 31, 2021

இலங்கையில் 7,674 டெங்கு நோயாளர்கள் : 4 பேர் உயிரிழப்பு

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது டெங்கு நோய் பரவலில் வீழ்ச்சியை அவதானிக்க முடிகிறது. ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 7,674 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற டெங்கு நோய் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் மேற்கூறிய விடயங்களைத் தெரிவித்தனர்.

இதன்போது தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர குறிப்பிடுகையில், கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் இதுவரையில் குறைந்தளவான டெங்கு தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர்.

எனினும் இதேநிலைமை தொடரும் என்று கூற முடியாது. காரணம் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும். இவ்வாண்டு இதுவரையில் நால்வர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது நாட்டில் கொவிட் நிலைமையும் காணப்படுகின்றமையால் வழமையை விட மாறுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

வழமையைப் போன்று வீடுகளுக்குச் சென்று பரிசோதிக்க வேண்டிய சூழல் இல்லை. டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச சுகாதார மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டோர் தற்போது கொவிட் தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையால் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றால் மாத்திரமே இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவிக்கையில், மேல் மாகாணத்திலும், கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதேச சுகாதார மருத்துவ பிரிவுகளிலேயே டெங்கு நோய் அதிகமாகக் காணப்படும்.

இந்த பிரதேசங்களில் ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தமையை அவதானிக்க முடிகிறது.

இதுவரையில் நாடளாவிய ரீதியில் 7,674 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 766 நோயாளர்கள் மே மாத்தில் மாத்திரம் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 31,600 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டனர். அதற்கமைய கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி காணப்படுகிறது.

இதன்போது கருத்து தெரிவித்த கொழும்பு மாநகரசபையின் மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷினி திசாநாயக்க, இந்த 5 மாதங்களில் கொழும்பில் 381 டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் கணிசமானளவு சிறுவர்கள் காணப்படுகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2020 இல் மிகக் குறைந்தளவான டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர். நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில் மக்கள் தமது சுற்று சூழலை தாமாகவே தூய்மைப்படுத்திக் கொண்டனர். இதன் காரணமாகவே கடந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிந்தது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment