(எம்.ஆர்.எம்.வசீம்)
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீர்பற்றியதால் கடல் சமுத்திரத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு காரணமாக கடற்றொழிலாளர்களுக்கு சுதந்திரமான முறையில் தங்களின் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அரசாங்கத்துக்கு கிடைக்கும் நஷ்டயீட்டில் ஒரு தொகையை கடற்றொழிலாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் குறித்த கப்பல் கடலுக்குள் மூழ்கினால், அதன் பாதிப்பில் இருந்து மீள இன்னும் 40 வருடங்கள் வரை செல்லும் என சூழலியல் ஆய்வாளர் பேராசிரியர் அஜந்த பெரேரா தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீர்பற்றியதால் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதில் இருக்கும் பாதிப்பு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், நச்சுத்தன்மை அடங்கிய இரசாயன பொருட்களுடன் வந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் எமது கடல் எல்லைக்குள் தீர்பற்றியதால், கடற்றொழிலாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எமது நாட்டில் இருக்கும் கடற்றொழிலாளர்களில் அதிகமானவர்கள் தங்களின் தொழிலின் மூலம் சிறந்த லாபமீட்டி வருபவர்கள்.
தற்போது அவர்களது தொழில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் மீண்டும் மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு சென்று சுதந்திரமாக செயற்படுவதற்கு சுமார் 8 மாதங்கள் வரை செல்லும். அதனால் கொவிட் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அரசாங்கம் 5 ஆயிரம் ரூபா நிவாரணமாக வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றது.
அந்த 5 ஆயிரம் ரூபாவை மாத்திரம் பாதிக்கப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கிவிட்டு அரசாங்கம் நின்றுவிடக்கூடாது. மாறாக தீப்பற்றிய கப்பல் நிறுவனத்தினால் அரசாங்கத்துக்கு கிடைக்க இருக்கும் நஷ்டயீட்டில் ஒரு தொகையை பாதிக்கப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் நஷ்டயீடாக வழங்க வேண்டும்.
மேலும் தீப்பற்றிக் கொண்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இன்னும் கடலிலேயே இருக்கின்றது. அதனை எங்கு கொண்டுபோய் போடுவதென்ற பிரச்சினை இருக்கின்றது. என்றாலும் குறித்த கப்பல் கடலுக்குள் மூழ்கினால் எமது கடல் கட்டமைப்புக்கு பாரிய பாதிப்பு ஏற்படும்.
தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு பழைய நிலைமைக்கு வர சுமார் 20 வருடங்கள் வரை செல்லும். ஆனால் கப்பல் மூழ்கினால், அதன் பாதிப்பில் இருந்து மீள இன்னும் 40 வருடங்கள்வரை செல்லும் என்ற நம்புகின்றேன். அதனால் சீனாவின் உற்பத்தியான இந்த கப்பலை, சீனாவுக்கே கொண்டு செல்ல அரசாங்கம் முடியுமானால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் அரசாங்கம் நஷ்டயீடு தொடர்பாக மாத்திரம் சிந்திக்கின்றதே தவிர, எமது கடல் சமுத்திரத்திற்கு ஏற்பற்றிருக்கும் பாதிப்பு தொடர்பில் சிந்திப்பதில்லை. எனவே அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் இந்தளவு பாதிப்பு நாட்டுக்கு ஏற்பட்டிருக்காது என்றார்.
No comments:
Post a Comment