முறையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால் அதிக மரணங்கள் பதிவாகியிருக்காது : பேராசிரியர் திஸ்ஸ விதாரன - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

முறையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால் அதிக மரணங்கள் பதிவாகியிருக்காது : பேராசிரியர் திஸ்ஸ விதாரன

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதற்கட்டத்தில் முழுமையாக செலுத்தியிருந்தால் கொவிட்-19 தாக்கத்தினால் அதிக மரணங்கள் பதிவாகியிருக்காது. சுகாதார தரப்பினரதும், விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்படுகின்றமை கவலைக்குரியது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், புது வருட கொவிட் கொத்தணியை கட்டுப்படுத்த தற்போது காலம் தாழ்த்தப்பட்ட வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை செயற்படுத்தப்பட்டுள்ளன. 

புது வருட காலத்தில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களும், விசேட வைத்தியர்களின் அறிவுறுத்தல்களும் முறையாக செயற்படுத்தப்பட்டிருந்தால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை தோற்றம் பெற்றிருக்காது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விசேட பொறிமுறையினை பாராளுமன்றினை பிரதிநித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் ஆலோசனைகளை பெற்று வகுக்க வேண்டும். 

ஒவ்வொரு பிரதேசத்தையும் பிரதிநித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் தங்களின் பிரதேச நிலவரம் குறித்து அதிக அக்கறை கொள்ள பாராளுமன்றத்தின் ஊடாக சிறந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் என கொவிட் முதலாம் அலைத்தாக்கத்தின் போது குறிப்பிட்டேன். இத்திட்டங்களை செயற்படுத்துவதற்கான தேவை கிடையாது என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad