முஸ்லிம் எம்.பிக்களின் சமூகம் சார்ந்த விடயங்களை முகநூல்களில் விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல - இஷாக் ரஹுமான் - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

முஸ்லிம் எம்.பிக்களின் சமூகம் சார்ந்த விடயங்களை முகநூல்களில் விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல - இஷாக் ரஹுமான்

முஸ்லிம் மார்க்க தலைவர்களின் விடுதலை, முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் குறித்து பேசுவதற்காகவே பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தோமே தவிர இப்தார் நிகழ்வில் கலந்து கொள்வதற்கல்ல. இச்சந்திப்பினை முகநூல்களில் பிழையாக விமர்சனம் செய்வதையிட்டு கவலையடைகின்றேன் என அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹுமான் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற்று முந்தினம் அலரி மாளிகையில் சந்தித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள் குறித்து பேசுவதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மாலை 5.30 மணிக்கு சந்தித்தோம். 

அதில் முஸ்லிம் மார்க்கத் தலைவர்களினதும் அரசியல் தலைவர்களினதும் விடுதலை மற்றும் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன. இதற்கான தீர்வுகள் மிக விரைவில் எட்டப்படவுள்ளன.

அத்துடன் கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் குறித்தும் அங்கு பேசப்பட்டது. இவ்வாறான நிலையில் இப்தாருக்கான நேரம் நெருங்கியதைத் தொடர்ந்து அங்கு திடீரென இப்தார் ஒழுங்குகள் செய்யப்பட்டன.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சமூகம் எதிர்நோக்கும் தற்கால பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக சந்தித்ததை இன்று அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் பிழையான முறையில் முகநூல்களில் விமர்சிப்பதானது முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

முஸ்லிம் சமூகம் உணர்ச்சிவசப்படும் சமூகமாக தற்கால சூழலில் இருந்து விடக்கூடாது. கடந்த நல்லாட்சியில் மிக பலமாக இருந்து எமது முஸ்லிம் கட்சிகளால் சமூகம் சார்ந்த எந்த விடயத்தையும் சாதிக்க முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment