தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் மு.க. ஸ்டாலின் - கண்கலங்கிய துர்கா - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் மு.க. ஸ்டாலின் - கண்கலங்கிய துர்கா

தமிழக முதலமைச்சராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (07.05.2021) பதவியேற்றார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்றனர்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்து வைத்தார்.

ஸ்டாலின் எனும் நான் என கவர்னர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று கூறி ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.

பதவி ஏற்பு விழாவுக்காக மு.க. ஸ்டாலின் காலை 8.45 மணிக்கு தனது இல்லத்திலிருந்து அரசாங்கம் வழங்கிய அரசு முத்திரையுடன் கூடிய காரில் ஏறி கவர்னர் மாளிகை நோக்கி வந்தார். சரியாக 8.55 மணிக்கு ஸ்டாலின் விழா மேடைக்கு வந்தார். 

அவரை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேடையில் அமர்ந்த ஸ்டாலின், அமைச்சர்களிடம் கோப்புகளில் கையெழுத்து பெற்றபின் நடைமுறைகள் என்னென்ன என்று ஸ்டாலினிடம் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் விளக்கிக் கூறினார்.

சரியாக 9 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் அரங்கிற்கு காரில் வந்து இறங்கினார். கவர்னரை தி.மு.க தலைவர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

பின்னர் பதவி ஏற்க உள்ள அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன் சபரீசன், பேரக் குழந்தைகளை ஸ்டாலின் கவர்னருக்கு அறிமுகப்படுத்தினார். கவர்னர் பேரக் குழந்தைகளை அருகில் அழைத்துக் கொஞ்சினார். பின்னர் அனைவரும் மேடைக்குச் சென்றனர்.

பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆளுநர் ஸ்டாலினுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

ஸ்டாலின் எனும் நான் என கவர்னர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று கூறி ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். 

அப்போது துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். யாரும் கவனிக்காவண்ணம் கண்களை துடைத்துக் கொண்டார். பின்னர் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட ஸ்டாலினுக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். கவர்னருக்கு ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து அளித்தார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

No comments:

Post a Comment