இருபதுக்கு ஆதரவளித்த பின் எந்த சமூக பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காண முடிந்தது? - கேள்வி எழுப்பினார் இம்ரான் - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

இருபதுக்கு ஆதரவளித்த பின் எந்த சமூக பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காண முடிந்தது? - கேள்வி எழுப்பினார் இம்ரான்

இருபதுக்கு ஆதரவளித்த பின் எந்த சமூக பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காண முடிந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பினார்.

வியாழக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இஃப்த்தார் நிகழ்வில் இருபதுக்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்டிருந்தார்கள். இதில் பொதுஜன பெரமுன, சுதந்திர கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. எனவே இது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அரசு அடுத்து கொண்டுவரவுள்ள சட்டமூலங்களுக்கு இவர்கள் ஆதரவளிக்க தயாராகிறார்களா என்ற கேள்வி இதன் மூலம் எம்மத்தியில் எழுந்துள்ளது. காரணம் எதிர்வரும் காலங்களில் இரண்டு முக்கியமான சட்டமூலங்களை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எண்ணியுள்ளது.

ஒன்று துறைமுக நகரை மொத்தமாக சீனாவுக்கு தாரைவார்க்கும் சட்டமூலம். அடுத்தது சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஒழிக்கும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சட்டமூலம். இந்த சட்ட்டமூலங்களுக்கும் இவர்களின் ஆதரவை பெறவா இந்த இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்ற கேள்வி இன்று எமக்குள் எழுகிறது.

ஆனால் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவே இந்நிகழ்வுக்கு சென்றதாக அதில் கலந்துகொண்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருந்ததை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அவ்வாறு அவர்கள் பேசியிருந்தால் சந்தோசமே.

ஆனால் இவர்கள் கூறுவதை போன்று என்ன சமூக பிரச்சினைக்கு இவர்களால் தீர்வுகளை பெற்றுத்தற முடியும்? அபகரிக்கப்படும் கிழக்கு மாகாண காணிகளை இவர்களால் மீட்க முடிந்ததா? அல்லது இதை தடுக்க முடிந்ததா? றிசாத் பதியுதீன் அசாத் சாலி போன்றவர்களின் கைதை தடுக்க முடிந்ததா? அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள புர்கா தடையை நீக்க முடிந்ததா? இருபதுக்கு ஆதரவளித்த பின் இவர்களால் எந்த சமூக பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காண முடிந்தது என்பதை இவர்களில் ஒருவராவது கூறுவார்களா?

எதிர்காலத்தில் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் சட்டமூலங்களுக்கு இவர்கள் ஆதரவு வழங்குவார்களேயானால் அது சிறுபான்மை சமூகத்தின் பல சந்ததிகளை பாதித்து எமது இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் கேள்விக்குறியாக்கும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment