தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் - மேலதிகமாக பயணித்தால் வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் - மேலதிகமாக பயணித்தால் வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல்

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இடம்பெறும் கொண்டாட்ட நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் பொது போக்குவரத்து, வாடகை அடிப்படையில் போக்குவரத்து செயற்பாடுகளில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதுடன், அவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த முதலாம் திகதி விசேட சுற்றுநிறுபம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த சுற்றுநிறுபத்தின்படி கொண்டாட்ட நிகழ்வுகள், விருந்துபசாரங்கள், செயலமர்வுகள் உட்பட மக்கள் ஒன்றுக்கூடும் அனைத்து செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் கண்காணிக்குமாறு குறிப்பிட்டு பொலிஸ் தலைமையகத்தினால், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்று நிறுபமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த விடயங்கள் தொடர்பில் பொலிஸ் புலனாய்வு பிரிவினரை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பொது போக்குவரத்து செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் வாகனங்கள் மற்றும் வாடகை அடிப்படையில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில், கண்காணிக்கவும் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேரூந்து ஒன்றின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் செல்ல அனுமதியுள்ளது.

இதன்போது வாடகை அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் கார் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சாரதிக்கு மேலதிகமாக இருவர் மாத்திரமே பயணிக்க முடியும். 

அவ்வாறு இல்லாமல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள், சாரதிகள், சாரதி உதவியாளர்கள் மற்றும் வாகன நடத்துனர்கள் ஆகிய அனைவருக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதனுடன் தொடர்புடைய வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்வர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக நேற்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் வெலிபென்ன மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 9 பேரும் உள்ளடங்குவர்.

அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 5,248 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment