ஜனாதிபதிக்கு உண்மையான தகவல்கள் வழங்கப்படுவதில்லை, அதனால் நாடு பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்திருக்கிறது : மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில் வல்லுனர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 15, 2021

ஜனாதிபதிக்கு உண்மையான தகவல்கள் வழங்கப்படுவதில்லை, அதனால் நாடு பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்திருக்கிறது : மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில் வல்லுனர்கள் சங்கம்

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவல்கள் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் முறையாக வழங்கப்படாமையினால் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் வெவ்வேறு நிலைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றன. அதனால் நாடு பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்திருக்கிறது என மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, நாடு எதிர்வரும் சில நாட்களில் முகங்கொடுக்கக் கூடிய மிக மோசமான நிலைக்கு, தகவல்களை உரியவாறு முகாமை செய்வது குறித்து மேலும் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும். 

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகின்றது. அது குறித்து விரிவாக ஆராய்வதற்கும், அதனடிப்படையில் மதிப்பீடுகளைச் செய்வதற்கும் தகவல்களையும் தரவுகளையும் சரியாகப் பேண வேண்டும்.

அதேவேளை தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கான ஆய்வுகூட வசதிகள் அவற்றின் இயலுமையைக் கடந்துள்ளன. 

அத்தோடு தொற்றைக் கண்டறிவதற்கு பி.சி.ஆர் பரிசோதனைகளில் மாத்திரமே தங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது. அதனால் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளின் நிலை தொடர்பில் தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவு நாளாந்தம் அறிக்கையிட வேண்டும். ஆனால் அவ்வாறு அறிக்கையிடப்படாதமையினால், தொற்றின் பாரதூரத்தன்மையை மதிப்பீடு செய்வது கடினமானதாக மாறியுள்ளது. 

அதேபோன்று இந்தத் தகவல்களை முறையாகப் பேணுவதற்குரிய செயற்திட்டம் எதுவும் வகுக்கப்படாமை பாரிய குறைபாடாகக் காணப்படுகின்றது என்றார்.

No comments:

Post a Comment