எம்.மனோசித்ரா
ஐரோப்பிய முதலீட்டு வங்கியூடாக மிகக்குறைந்த வரிச் சலுகை அடிப்படையில் இலங்கைக்கு கடனுதவியை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் உறுதியளித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்ததோடு, அவர்களுடன் தீர்க்கமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார். இதன்போதே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு பிரிவின் பிரதானி உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
கொவிட் தொற்றின் காரணமாக பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையின் மருத்துவ கட்டமைப்பிற்கு தேவையான மருத்துவ உபரணங்களை பெற்றுக்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கோரிக்கை விடுத்தார். இதற்கு ஐரோப்பிய ஒன்றிய பிரதானிகள் இணக்கம் தெரிவித்தனர்.
இலங்கையின் அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்தார்.
இதன்போது ஐரோப்பிய முதலீட்டு வங்கியூடாக இலங்கைக்கு மிகக் குறைந்த வட்டி அடிப்படையிலான கடனுதவியை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment