எதிர்த்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சி - மதுர விதானகே - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

எதிர்த்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சி - மதுர விதானகே

(செ.தேன்மொழி)

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள மக்களை காப்பாற்றுவதுடன், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், எதிர்த்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி பிழையான எண்ணங்களை மக்கள் மயப்படுத்த முயற்சித்து வருவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றஞ்சாட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, உள்நாட்டு யுத்தத்தை நிறைவடையச் செய்ததன் விளைவால் இன்று உயர்தரப் பரீட்சையின் போது கணிதப் பிரிவில் முதலாம் இடத்தை யாழைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார். இதற்கான வாய்ப்பை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவே பெற்றுக் கொடுத்துள்ளார். 

இதேவேளை கொவிட்-19 வைரஸ் பரவலானது எப்போது கட்டுப்படுத்தப்படும் என்பதை உறுதியாக கூற முடியாது என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அதனால் நாம் கொவிட் வைரஸூடன் வாழ்வதற்கு எம்மை பழக்கப்படுத்தி வருகின்றோம்.

இந்நிலையில் வைரஸ் பரவல் தொடர்பில் நிபுணர்கள் கூறும் கருத்துகளை கருத்திற் கொள்ளாது, எதிர்த்தரப்பினர் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தி தவறான எண்ணங்களை மக்கள் மயப்படுத்தி வருகின்றனர்.

பாராளுமன்ற கூட்டங்களை மக்களால் நேரடியாக பார்வையிடுவதற்கு முடியாத நிலைமை காணப்படுவதனால், எதிர்த்தரப்பினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். 

இந்நிலையில் எதிர்த்தரப்பினர் பாராளுமன்ற அமர்வுகளின் போது காலையில் பாராளுமன்றத்திற்கு வந்து, உணவு வேளைகளை முடித்துக் கொண்டு, பல வகையான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதேவேளை, ஊடகங்களை பயன்படுத்திக் கொண்டு பொய்யான கருத்துகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கின்றனர். 

நாட்டில் வைரஸ் தொற்றாளர்கள் அதிகரிக்க வேண்டும், உயிரிழப்புகள் அதிகரிக்க வேண்டும் என்பதோடு இந்தியாவின் நிலைமை எமது நாட்டுக்கும் ஏற்பட வேண்டும், அதனூடாக தங்களது அரசியல் செயற்பாடுகளை வெற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது பிரார்த்தனையாகும்.

பயங்கரவாதி சஹ்ரான், தான் தாக்குதல் நடத்தப் போவதாக தெரிவித்திருந்தும் அந்த தாக்குதலை நிறுத்த முடியாமல் போயிருந்தது. ஆனால், தற்போது வைரஸ் பரவல் காரணமாக நாங்கள் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. 

வைரஸ் பரவலை காரணம் காட்டி நாட்டை முடக்கி வைப்பதால் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் வீழ்ச்சியடையும். அதனால் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான செயற்பாடகளை நடைமுறைப்படுத்தி, பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். இதனையே ஜனாதிபதி செய்து வருகின்றார். 

இன்று உலக நாடுகள் கூட கொரோனா வைரஸ் பரவலை கொண்டு அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள பழகிக் கொண்டுள்ளன. ஆனால், அரசாங்கம் கொரேனா வைரஸை முகாமைத்துவம் செய்வதுடன், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

கடந்த அரசாங்கம் வெளிநாடுகளில் கடன்களை பெற்றுக் கொண்டுடதுடன், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்று எமது நாட்டு வளங்களை விற்பனை செய்து பெருந்தொகையான பணத்தை பெற்றுக் கொண்டிருந்தது. 

ஆனால், நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, நாட்டில் அடிப்படைவாத செயற்பாடுகளை வளர்த்து, இனங்களுக்கிடையில் பிரிவினைகளை ஏற்படுத்தி சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment