இலங்கைக்கு உதவி கரம் நீட்டுமாறு பன்னாட்டு இராஜதந்திரிகளிடம் கோரிக்கை விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - உள்ளக பிரச்சினைகளுக்காக நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறிக்குள்ளாக்க வேண்டாமென ஆட்சியாளர்களிடம் கோரினார் - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

இலங்கைக்கு உதவி கரம் நீட்டுமாறு பன்னாட்டு இராஜதந்திரிகளிடம் கோரிக்கை விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - உள்ளக பிரச்சினைகளுக்காக நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறிக்குள்ளாக்க வேண்டாமென ஆட்சியாளர்களிடம் கோரினார்

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திற்குள் காணப்படும் பணிப்போரை கைவிட்டு கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க உலகின் செல்வந்த நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கு உதவி கரம் நீட்டுமாறு பன்னாட்டு இராஜதந்திரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காணொளி பதிவின் ஊடாக விசேட அறிவித்தலொன்றை விடுத்து இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், பன்னாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பின் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கையின் மருத்துவ கட்டமைப்பிற்கு வழங்கப்படக்கூடிய அதிகபட்ச மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

அத்தோடு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய தேவையாகக் காணப்படுகின்ற தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறும் இராஜதந்திரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறுகிய நேரத்தில் அதிகளவிலான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு உகந்த பி.சி.ஆர். இயந்திரத்தை பெற்றுக் கொடுக்குமாறும் கோரியுள்ளோம்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் நடமாடும் வைத்தியசாலைகள் அத்தியாவசியமானவையாகும். இது தொடர்பில் தூதுவர்களுடனான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது. எமது பிரதான இலக்கு சகல மக்களையும் கொவிட் பாதிப்பிலிருந்து காப்பாற்றுவதாகும். இதன் மூலம் அரசியல் இலாபம் பெறுவது எமது எதிர்பார்ப்பல்ல.

நாம் ஒருபோதும் கொரோனாவை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதுமில்லை. எனவே தற்போது அரசாங்கத்திற்குள் காணப்படும் பணிப்போரை கைவிட்டு மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வர வேண்டும்.

தனிப்பட்ட இலக்குகளை சற்று புறந்தள்ளி மக்களை பாதுகாக்க வேண்டிய இந்த பாரிய போராட்டத்தில் அவதானத்தை செலுத்துமாறு அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம். கொவிட் மூன்றாம் அலையுடன் முழு நாடும் செயழிலந்து, மக்கள் பாரிய நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பாரிய மக்கள் ஆணையைப் பெற்றுள்ள அனைவரும் 220 இலட்சம் மக்களின் வாழ்வை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். உள்ளக பிரச்சினைகளுக்காக நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறிக்குள்ளாக்க வேண்டாம் என்று ஆட்சியாளர்களிடம் கோருகின்றோம்.

பெருமளவான மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வெகுவிரைவில் தடுப்பூசி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும், நடமாடும் வைத்தியசாலைகளை நிறுவுமாறும், பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரிக்குமாறும், அதற்கு தேவையான வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுங்கள். கொவிட் ஒழிப்பிற்காக எதிர்க்கட்சி என்ற ரீதியில் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம். உலகிலுள்ள தனவந்த நாடுகளுடன் நட்புறவைப் பேணி அந்நாடுகளிடமிருந்து அதிகபட்ச உதவியைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதே போன்று நாட்டு மக்களும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நாமனைவரும் ஒன்றிணைந்து கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவோம். அதன் பின்னர் ஜனநாயக ரீதியில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். அதுவரையில் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நாடு என்ற ரீதியில் பயணிப்போம்.

கொவிட் கட்டுப்படுத்தலுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு வெளிநாட்டு தூதுவர்களிடம் மீண்டும் கோருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad