கோட்டாபய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதனால் கொவிட் தொற்று ஏற்பட்டது போன்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர் : அமைச்சர் ஜோன்ஸ்டன் - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

கோட்டாபய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதனால் கொவிட் தொற்று ஏற்பட்டது போன்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர் : அமைச்சர் ஜோன்ஸ்டன்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்றே ஜனாதிபதியும் இத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆலோசனை வழங்கினார். நாம் பல சவால்களுக்கு முகங்கொடுப்பவர்கள் ஆவர். இலங்கைக்கு மாத்திரம் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி எண்ணுகின்றது. இன்றேல், ஏன் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதனால் கொவிட் தொற்று ஏற்பட்டது போன்று பிரசாரம் செய்கின்றனர் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று (07) நடைபெற்ற ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டளவில் திட்டமிடல் நிறைவு செய்யப்பட்டிருந்த ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டம் கடந்த அரசாங்கத்தினால் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் பிரதமரின் தலைமையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கமைய கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான 24 கிலோமீற்றர் வரையான முதற்கட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களின் போது இரத்தினபுரி மற்றும் பெல்மதுல்ல வரை இந்த அதிவேக நெடுஞ்சாலை நீடிக்கப்படும்.

ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்தல், செலவை குறைத்தல், நேர வீண்விரயத்தை குறைத்தல், தேயிலை, ஆடை, சிறு ஏற்றுமதி பயிர் மற்றும் இரத்தினக்கல் சந்தை மற்றும் விநியோக இடங்களுக்கான அணுகலை எளிதாக்கல், சுற்றுலாத்துறை உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் போன்ற எதிர்பார்க்கப்படும் அனுகூலங்கள் பலவாகும்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், இவ்வாறு எத்தனை சவால்கள் ஏற்படினும் நமது நாட்டின் அபிவிருத்தியை நாம் பின்னோக்கி நகர்த்தமாட்டோம். ஒரு நாள் நாம் நிறுத்துகின்றோம் எனின், ஒரு நாளினால் நாம் பின்னோக்கி நகர்வோம். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்து யுத்தத்தை நிறைவுசெய்து அன்று ஒரு வேலைத்தளமாகக் காணப்பட்ட நாட்டை கடந்த அரசாங்கம் ஒரு தரிசு நிலமாக மாற்றியது. அவ்வாறு தரிசு நிலமாக்கப்பட்டதை மீண்டும் வேலைத்தளமாக மாற்றுவதற்கே நாம் முயற்சித்து வருகின்றோம்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானவுடன் நாம் பாதுகாப்பாக இருப்பதாக தோன்றியது. எமது ஜனாதிபதி போன்றே பிரதமரும் மிகவும் திறமையாக நாட்டை வழிநடத்தி நிலையான பொருளாதாரத்தை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார். மக்கள் அன்று எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீது கொண்ட நம்பிக்கைக்கு தீங்கு ஏற்படும் வகையில் எந்தவொரு செயற்பாட்டையும் அரசு முன்னெடுக்காது.

இந்த அதிவேக நெடுஞ்நாலை இரத்தினபுரி மக்களுக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் முக்கியமானதாகும்.

கண்டி அதிவேக நெடுஞ்சாலையை துரிதமாக நிறைவுசெய்யுமாறு பிரதமர் அடிக்கடி எமக்கு ஆலோசனை வழங்குவார். தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு கூறுவார். அப்பணியை நாம் துரிதமாக முன்னெடுத்து வருகிறோம்.

கடந்த அரசாங்கம் மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் கட்டுமானத்தின் ஒரு பகுதியை அந்த அரசாங்கத்தின் அமைச்சருக்கு வழங்கியது. அவர்கள் ஹெலிகொப்டர்களை பெற்றுக் கொண்டனர். அந்த ஹெலிகொப்டர்களில் பணித்தவர்கள் இன்று எம்மை சாடுகின்றனர்.

ஆனால் அதிவேக நெடுஞ்சாலை பகுதியின் பணிகளை நிறைவுசெய்யவில்லை. அதிவேக நெடுஞ்சாலைகளில் தங்கமா போடப்படுகிறது என எம்மிடம் கேள்வி எழுப்பியவர்கள் செய்தது என்னவென்றால் வெளிப்புற சுற்றுவட்ட நெடுஞ்சாலையில் இரு பாதைகளை குறைத்து, எமது மதிப்பீட்டிற்கே ஒப்பந்தம் வழங்கி அதன் மூலமும் சுரண்டியது மாத்திரமே என அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, பவித்ரா வன்னிஆராச்சி, வாசுதேவ நாணயக்கார, ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, நிமல் லன்சா, ஜயந்த சமரவீர, ஜானக வக்கும்புர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, சஞ்ஜீவ எதிரிமான்ன, காமினி வலேபொட, அனூப பாஸ்குவேல், முதிதா பிரிசாந்தி டி சொய்சா, லலித் எள்ளாவல, கயஷான் நவநந்த மற்றும் பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.டப்ளிவ்ஆர்.பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சமிந்த அதளுவகே மற்றும் அமைச்சின் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment