நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன : நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன : நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

(இராஜதுரை ஹஷான்)

நுகர்வோர் விவகார அதிகாரிகள் ஊடகங்களுக்கு மத்தியில் வீண் கருத்துக்களை குறிப்பிடுவதை விடுத்து நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்க பொறுப்புடன் செயற்பட வேண்டும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் நிலைமையினை கருத்திற்கொண்டு பயணத்தடை தளர்த்தப்படும் போது ஒரு சில வியாபாரிகள் நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான சூழ்நிலையில் நுகர்வோரை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி அதனூடாக இலாபம் பெறும் முயற்சிகளை வியாபாரிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை சந்தையிலும், விற்பனை நிலையங்களிலும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை ஆராய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்பபட்டடது. நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கால அவகாசம் இவ்வாறு வழங்கப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் முழு நாடும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள வேளையில் ஒரு சில வர்த்தகர்கள் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளமை வெறுக்கத்தக்கது. கடந்த 25 ஆம் திகதி அத்தியாவசிய பொருட்களின் விலை அரசாங்கத்தின் விலை நிர்ணயத்தன்மைக்கு மாறாக அதிகமான விலையில் விற்கப்பட்டுள்ளது. செய்வதற்கு பிறிதொரு வழியில்லாத நிலையில் நுகர்வோரும் அதிக விலைக்கு கொள்வனவு செய்துள்ளார்கள்.

பயணத்தடை காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில வர்த்தகர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளமைக்கு எதிராக அரச அதிகாரிகள் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. 

பயணத்தடை தளர்த்தப்படும் வேளையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நுகர்வோர் விற்பனை நிலையங்கள் முன்பாக நெடுநேரம் வரிசையில் காத்திருப்பார்கள். கடைக்குள் சென்றதன் பின்னர் வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment