ஈரான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர்

எதிர்வரும் ஜூன் 18ஆம் திகதி நடைபெறும் ஈரான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அந்நாட்டு நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரய்லி உட்பட ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்கு நெருக்கமானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இப்ராஹிம் ரய்லி உட்பட அந்நாட்டின் அணுசக்தி துறையின் முன்னாள் ஆலோசகர் சயீத் ஜலீல், முன்னாள் தளபதி மோசின் ரேசாய், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ரசா ஜகானி, தற்போதைய உறுப்பினர் அமீர் ஹுசைன் காஜிஸ்தி, முன்னாள் மாகாண ஆளுநர் மோசின் மெஹராலிசேத், மத்திய வங்கியின் தலைவர் அப்துல் நசீர் ஹிம்மதி ஆகியோரும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர் என்று அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது.

1998ஆம் ஆண்டு அதிகமானவர்களுக்கு மரண தண்டனை விதித்த சட்டத்துறைத் தலைவர் இப்ராஹிம் ரய்லிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனியின் ஆதரவையும் இப்ராஹிம் ரய்லி பெற்றுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரூஹானியுடன் அண்மையில் இணைந்த அந்நாட்டு பாராளுமன்ற முன்னாள் தலைவர் அலி லாரிஜானிக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஈரான் காவலர் சபை வாய்ப்பு அளிக்க மறுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மொத்தம் 590 பேர் பதிவு செய்திருந்ததாகவும், அதில் 7 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டதாகவும் ஈரானின் காவலர் சபை செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் அலி தெரிவித்தார்.

கடந்த 2017 இல் நடைபெற்ற தேர்தலில் 1,630 பேர் போட்டியிட பதிவு செய்திருந்தனர்.

தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரூஹானி இரு தவணைகளை பூர்த்தி செய்திருப்பதால் இம்முறை தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad