மருத்துவ துறையினருக்கு நெருக்கடிகள் தொடருமாயின் நாமும் பணிகளிலிருந்து விலக வேண்டியேற்படும் - சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

மருத்துவ துறையினருக்கு நெருக்கடிகள் தொடருமாயின் நாமும் பணிகளிலிருந்து விலக வேண்டியேற்படும் - சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பு

(எம்.மனோசித்ரா)

வைத்தியர்கள் அல்லாத மருத்துவ ஊழியர்கள் பொலிஸாரால் வீதிகளில் சோதனைக்குட்படுத்தப்பட்டு, தொழிலுக்கு செல்ல விடாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். மருத்துவதுறை ஊழியர்களுக்கு இந்த நெருக்கடி தொடருமானால் வைத்தியர்கள் உள்ளிட்ட பணிக்குழுவினருக்கு அவர்களது கடமைகளிலிருந்து விலக வேண்டியேற்படும் என்று பொலிஸ்மா அதிபருக்கு அறியத்தருவதாக சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மருத்துவ துறை சார்ந்தவர்கள் பணிக்கு செல்லும் போது பொலிஸாரால் இடை மறிக்கப்பட்டு திருப்பி அனுப்படுகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் கவலைக்குரியவையாகும். 

வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மாத்திரமே சேவையாற்றுவதில்லை என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். வைத்தியர்கள் தவிர ஏனைய ஊழியர்கள் இன்றி வைத்தியசாலை செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

எனவே ஏதெனுமொரு பிரதேசத்தில் மருந்து பணியாளர் ஒருவர் வைத்தியர் இல்லை என்ற காரணத்தினால், அவர் கைது செய்யப்பட்டால் அல்லது பொலிஸாரால் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தால் அதற்கு எதிராக எமக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும்.

சோதனை செய்வதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் தொழில் அடையாள அட்டையில் வைத்தியரா என்பதை மாத்திரம் அவதானிக்காது, அவர் மருத்துவ பணியாளரா என்பதை அவதானிக்குமாறு பொலிஸாரிடம் கேட்டுக் கொள்கின்றோம். 

வைத்தியர் அல்லாத மருத்துவ பணியாளர் ஒருவர் பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டு தொழிலுக்கு செல்ல முடியாமல் திருப்பி அனுப்பப்படுவாராயின் வைத்தியர்கள் உள்ளிட்ட ஏனைய பணிக்குழாமினருக்கும் சேவையிலிருந்து விலக வேண்டியேற்படும்.

எனவே தயவுசெய்து எமக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார ஊழியர்களை மறந்துவிட வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம்.

இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என்று பொலிஸ்மா அதிபருக்கு அறியத்தருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment