நவீன நகரங்களாக நான்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய பிரதமர் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

நவீன நகரங்களாக நான்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய பிரதமர் நடவடிக்கை

குருநாகல், மத்தள, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை முழுமையாக நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று (05) முற்பகல் இடம்பெற்றது.

இந்நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் திட்டத்தை செயற்படுத்த வேண்டிய விதம் குறித்து அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

நவீன சந்தை கட்டிடத் தொகுதி, அனைத்து வசதிகளையும் கொண்ட மொத்த விற்பனை நிலையம் மற்றும் வாராந்த சந்தை, வாகன தரிப்பிடம், நகர் பூங்கா, பேருந்து தரிப்பிடம், பல்நோக்கு கட்டிடம் மற்றும் நடுத்தர வர்த்க வீடமைப்பு தொகுதி உள்ளடங்களாக பெலிஅத்த நகர் அபிவிருத்தி செய்யப்படும் விதம் குறித்து நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளினால் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

இரட்டை வழிச் சாலை அமைப்பு, வெளியிலும் உள்ளேயும் சுற்றுவட்ட பாதை, நான்கு பாதைகள் கொண்ட சாலை அமைப்பு என்பவற்றை நிர்மாணிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மத்தள விமான நிலையத்தை மையமாகக் கொண்டு வர்த்தகம், தொழில், குடியிருப்பு வசதிகள், சுற்றுலா, சுகாதார வசதிகள் மற்றும் விவசாய மேம்பாட்டு வலயங்களை நிறுவுதல் மற்றும் மத்தள - லுணுகம்வெஹெர பகுதியில் செயற்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார்.

குருநாகல் நகரை நவீன நகரமாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது பிரதமர் கேட்டறிந்தார். அதற்கமைய குருநாகல் நகரை மையமாகக் கொண்டு எதிர்காலத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ, பவித்ரா வன்னிஆராச்சி, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதி பணிப்பாளர் நாயகம் ஆனந்த சமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment