எரிந்த கப்பலிலிருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

எரிந்த கப்பலிலிருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

(செ.தேன்மொழி)

தீ விபத்திற்குள்ளாகியுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச் சென்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நீர்கொழும்பு, பமுனுகம, துங்காலுபிட்டி மற்றும் கொச்சிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வசிப்பவர்கள், கப்பலிலிருந்து கரையொதுங்கியுள்ள பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பொருட்களை எடுக்கச் சென்றது சட்டவிரோத செயற்பாடாகும்.

குறித்த கப்பலில் இரசாயன திரவியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கப்பலிலிருந்து கரையொதுங்கியுள்ள பொருட்களில் எவ்வகையான இரசாயனங்கள் கலந்திருக்கும் என்று கூறமுடியாது.

இதன் காரணமாக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் இவ்வாறு பொருட்களை எடுத்துச் சென்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் நீர்கொழும்பு, பமுனுகம, துங்காலுபிட்டி மற்றும் கொச்சிகடை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரதேச வாசிகள் அந்த பொருட்களை எடுக்கும் காணொளி பதிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அவற்றின் ஊடாகவும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. அதற்கமைய குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment