தீ பிடித்து எரியும் சரக்கு கப்பலில் கரையொதுங்கிய திரவியங்களை எடுத்து சென்றோரை தேடும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

தீ பிடித்து எரியும் சரக்கு கப்பலில் கரையொதுங்கிய திரவியங்களை எடுத்து சென்றோரை தேடும் பொலிஸார்

(எம்.எப்.எம்.பஸீர்)

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்துள்ள கொள்கலன்கள், திரவியங்கள் மற்றும் சிதைவுகள் இலங்கையின் மேற்கு கடற் கரையில் கரை தட்டி வருகின்றன.

இன்றையதினம் (26) இவ்வாறான கொள்கலன்கள், திரவியங்கள் மற்றும் சிதைவுகள் மேற்கு கடற் கரைப் பகுதியான நீர்கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.

ஜா எல, கெப்பும்கொட, செத்தப்பாடுவ, துன்கல்பிட்டிய கடற் கரைகளில் நேற்றையதினம் குறித்த கப்பல் சிதைவுகள் மற்றும் கொள்கலன்கள் கரைதட்டின.

இந்நிலையில், தற்போது அமுலில் உள்ள பயணத் தடை உத்தரவினையும் மீறி, குறித்த கரையோர பிரதேச மக்கள், கரை ஒதுங்கிய திரவியங்கள், சிதைவுகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

கரையொதுங்கியுள்ள கொள்கலன்களில், இரசாயன பதார்த்தங்கள் இருந்துள்ள நிலையில், குறித்த கொள்கலன்கலையோ அல்லது கடலில் மிதந்து வரும் அக்கப்பலில் இருந்த பதார்த்தங்கள் என சந்தேகத்துக்கு இடமான பொருட்களையோ பொதுமக்கள் தொடுவதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுரவும் மீனவத் திணைக்களமும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்த பின்னணியிலேயே அதனை பொருட்படுத்தாது பொதுமக்கள் பொருட்களை வீடுகளுக்கு எடுத்து செல்வதை அவதானிக்க முடிந்தது.

கரை ஒதுங்கிய சிதைவுகள், பிளாஸ்டிக்கள், சில இரசாயன பொருட்கள் அடங்கியனவாக இருக்கலாம் என நம்பப்படும் மூடைகள், சொக்லட் வகைகள், பெக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் என பலவற்றை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்.

சிலர் குறித்த திரவியங்களை எடுத்து செல்ல தள்ளு வண்டியை பயன்படுத்தியமையையும் அவதானிக்க முடிந்தது.

இவ்வாறான நிலையில், பொது அறிவித்தலை மீறி, இவ்வாறான அபாயகரமான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதற்கு தேவையான ஆலோசனைகளை உரிய பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கவுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறான பின்னணியில் மேற்கு கடற் கரையில் தெற்கு மற்றும் வட மேற்கு எல்லைப்பகுதி வரையிலும் கடற்படை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது.

சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஆலோசனைக்கு அமைய, கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினதும் ஒத்துழைப்பை பெற்று இவ்வாறு விஷேட பாதுகாப்பு பொறி முறையொன்றினை நடை முறைப்படுத்தியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கேசரியிடம் கூறினார்.

அதன்படி சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் ஆலோசனைபடி, கப்பலின் பாகங்கள் அல்லது கொள்கலன்கள், திரவியங்கள் பெரும்பாலும் வெள்ளவத்தை முதல் களுத்துறை, வத்தளை - திக் ஓவிட்ட முதல் சிலாபம் வரையிலான கடற் கரைகளில் கரை தட்ட வாய்ப்புள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே அந்த கடல் பிரதேசங்களில் நேற்று முதல் கடற்படையின் விஷேட கண்கானிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியதாக கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.

இதனிடையே, குறித்த கப்பலிலுள்ள கொள்கலன்களில் இருந்து இரசாயனப் பொருட்கள் அல்லது எண்ணெய் கசிவு எற்பட்டதா என்பது தொடர்பில் நீரியல் வள ஆராய்ச்சி அபிவிறுத்தி முகாமை நிறுனவமான நாரா நிறுவனம் விசேட ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

விசேட குழுவொன்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment