எம்.மனோசித்ரா
கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தலைமையில் ஆளும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து, துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 2005 ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களையும், எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கிய விசேட குழுவொன்றை நியமித்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
எனவே அந்த சட்டத்திற்கு ஏற்ப நாடு அபாய கட்டத்திற்குள் சென்றுள்ள இந்த சந்தர்ப்பத்திலாவது மேற்கூறியவாறான குழுவை நியமித்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
அதனை விடுத்து சுகாதாரத்துறை நிபுணர்களை புறந்தள்ளி, அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கமையவே செயற்பட்டால் நாடு மேலும் பாதுகாப்பற்ற நிலைக்கே தள்ளப்படும்.
பிரேசிலில் வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்தில் அந்நாட்டு சுகாதார அமைச்சர் கூறியவற்றை கவனத்தில் கொள்ளாததோடு, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இராணுவ அதிகாரியொருவர் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தற்போது பிரேசில் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதே நிலைமை இலங்கையிலும் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.
No comments:
Post a Comment