அதிகாரத்திற்காக மக்களின் உயிரை துச்சமாக மதித்து செயல்படும் நிலையையே நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், பாராளுமன்றத்தில் கொவிட் பரவியதுக்கு சபாநாயகரும் அரசாங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும் - எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

அதிகாரத்திற்காக மக்களின் உயிரை துச்சமாக மதித்து செயல்படும் நிலையையே நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், பாராளுமன்றத்தில் கொவிட் பரவியதுக்கு சபாநாயகரும் அரசாங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும் - எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல

எம்.ஆர்.எம்.வசீம்

நாட்டில் கொவிட் பரவல் தீவிரமடைந்து செல்வதால் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டாம் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி தெரிவித்திருந்தபோதும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாக மக்கள் பிரதிநிதிகளும் பாராளுமன்ற சேவையாளர்களும் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த நிலைக்கு சபாநாயகரும் அரசாங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி பிரதமகொறடாவும் ஐக்கிய மக்கள் சக்தி சிரேஷ்ட பிரதித் தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்கள் சிலர் கொவிட் தொற்றுக்குள்ளாகி இருப்பது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிகாரத்திற்காக மக்களின் உயிரை துச்சமாக மதித்து செயல்படும் நிலையையே நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். கொவிட் தொற்று பரவல் நாடு முழுவதும் பரவி கட்டுப்படுத்த முடியாத நிலையை கடந்து சென்று கொண்டிருக்கிறது என்பது யதார்த்தமே.

இவ்வாறான நிலையில் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றும் அரசாங்கத்திற்குள்ள தேவையின் நிமித்தம், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை கருத்திற்கொள்ளாது பாராளுமன்றத்தை கூட்டியதால் இன்று மக்கள் பிரதிநிதிகளும் பாராளுமன்ற சேவையாளர்களும் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர்.

பாராளுமன்றத்தின் சபை முதல்வர் காரியாலயம், பொதுச் செயலாளர் காரியாலயம் மற்றும் பிரதி பொதுச் செயலாளர் காரியாலய உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அந்த காரியாலங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில், இதனை மிகவும் சாதாரண விடயமாக கருதியே சபாநாயகர் பாராளுமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுத்திருந்தார்.

பாராளுமன்றத்தை கூட்ட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமருடன் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில், ஆளும் கட்சியின் சபை முதல்வர் மற்றும் பிரதம கொறடா ஆகியோர் சகல எதிர்க்கட்சிகளினதும் கோரிக்கைகளையும் தாண்டி, தமது தனிப்பட்ட அபிப்பிராயங்களின் பிரகாரம் செயற்பட்டு பாராளுமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுத்தனர்.

ஆளும் தரப்பின் இந்நிலைப்பாட்டுக்கு அமையவே சபாநாயகர் அப்பொழுது செயற்பட்டார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் ஒரு தலைப்பட்சமாக சபாநாயகர் செயட்பட்டமை பாராளுமன்றத்தின் சுயாதீனத்திற்கு சவாலை ஏற்படுத்தி இருக்கின்றது.

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, இதன் பாரதூரம் குறித்து என்னால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை சிரிதேனும் கவனத்திற் கொள்ளாமலும் இதற்கு செவிசாய்க்காமலும் அரசாங்கம் செயற்பட்டது.

எமது விடயங்களை அரசாங்கம் கருதிற் கொண்டிருந்தால் தற்போதைய நிலையை ஒரளவுக்கேனும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்பதே எமது நம்பிக்கை.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவருக்கு கொரோனா தொற்று எற்பட்டது, பாராளுமன்றத்திற்கு வெளியே என்று கூறப்படுவது எந்த அடிப்படையில் என்பது குறித்து சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் தொற்றுக்குள்ளாவதற்கு 10 நாட்களுக்கு முன்னரே பாராளுமன்றத்திற்குள் சபாநாயகரின் பொதுச் செயலாளர் காரியாலயம், பிரதி செயலாளர் காரியாலயம் உட்பட பாராளுமன்ற வளாகத்திற்குள் தொற்றாளர்கள் பலர் இனம்காணப்பட்டிருந்தனர்.

அந்த சந்தர்ப்பங்களில் ஊடக சந்திப்புகளை நடத்தாத சபாநாயகர் தூக்கத்திலிருந்து திடீரென எழுந்தது போன்று தனது மனசாட்சி உருத்தல்களை மறைக்க முற்படுவதாக இது அமைகிறது.

மேலும் கொவிட் முதலாம் அலை தொடக்கம் அரசாங்கம் நடந்துகொண்டது மக்களின் பக்கம் அல்ல. முதலாம் அலையின் போது அதன் சவால்களை முறியடிக்க பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு நாங்கள் சமர்ப்பித்த யோசனையை கிடப்பில் போட்ட அரசாங்கம், தற்போது பாராளுமன்றத்தைக் கூட்டியது தனது சுயநல அரசியலுக்காகவும், தனது நெருங்கிய நண்பர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுவதற்காகும். அரசாங்கம் இக்காலத்தில் இதனை மேற்கொண்டதை பாரிய துரோகமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவருக்கும் அவரின் அலுவலர்களுக்கும் தொற்று ஏற்பட்டது பாராளுமன்றத்துக்கு வெளியே என்று சபாநாயகர் கூறுவது யாருடைய விஞ்ஞான உபதேசங்களின் பிரகாரம் என்பது தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவர் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். 

அதேபோல் இந்நேரத்தில் சகல பொறுப்புக்களையும் மக்கள் மீது சாட்டி, மக்களை குற்றவாளியாக காட்டுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவே அரசாங்கம் தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் செய்வதன் பாலுல்ல இயலாமை காரணமாக, ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்புகளுக்கும் அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad