தீப்பற்றி எரியும் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு முன் இந்தியா, கட்டார் துறைமுகங்களுக்குள் உட்பிரவேசிக்க அனுமதி மறுப்பு : அம்பலமாகியது புதுத் தகவல் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

தீப்பற்றி எரியும் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு முன் இந்தியா, கட்டார் துறைமுகங்களுக்குள் உட்பிரவேசிக்க அனுமதி மறுப்பு : அம்பலமாகியது புதுத் தகவல்

கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றி எரியும், எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிக்க முன்னதாக இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலுள்ள இரு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாகவும் எனினும், குறித்த இரண்டு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க இக்கப்பலுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின், நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் புது தகவலை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போது, இதனைத் தெரிவித்த அவர், இந்த கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட இரசாயன திரவியம் கசிந்ததால் இந்த தீ ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்த கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டிருந்த 1,486 கொள்கலன்களில், 25 டொன் நைட்ரிக் அமிலம் அடங்கிய பல கொள்கலன்களும் காணப்பட்டுள்ளன.

இந்த கொள்கலன்கள் முறையாக களஞ்சியப்படுத்தப்படாமையே இந்த தீ ஏற்படுவதற்கான காரணம் என எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின், நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் சுட்டிக்காட்டினார்.

கப்பலில் ஆபத்து நிலைமை அடையாளம் காணப்பட்ட போது, முதல் கட்டமாக இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள ஹசீரா துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்காக அனுமதி கோரப்பட்டிருந்தது.

எனினும், ஹசீரா துறைமுகத்தினால் இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து, கட்டாரிலுள்ள ஹாமட் துறைமுகத்துக்குள் இந்தக் கப்பல் பிரவேசிக்க முயற்சி கோரிய போதிலும், அக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து அக்கப்பல் தனது அடுத்த பிரயாண இலக்கான இலங்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது என எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின், நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் கூறினார்.

எனினும், கொழும்பு துறைமுகத்துக்கு பிரவேசிக்க அனுமதி கோர முன்னதாகவே கப்பலில் தீ ஏற்படுவதற்கான ஆபத்து நிலைமை தோன்றியிருந்ததாக நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா அல்லது கட்டாரில் உள்ள துறைமுகங்கள் ஒன்றில் அனுமதி வழங்கப்பட்டிருக்குமானால் இந்த பாரிய அழிவிலிருந்து தப்பிக்க முடியுமானதாக இருந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஜனவரி 28 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி தனது முதல் பயணத்தை ஆரம்பித்திருந்தது.

சிங்கப்பூரின் எக்ஸ்ப்ரஸ் கப்பல் சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் தனது மூன்றாவது வர்த்தக பயணித்தின் போது இவ்வாறு தீப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MV X-Press Pearl கப்பலில் அசிட் கசிவு ஏற்பட்டுள்ளதை அரபிக் கடல் பகுதியிலேயே கப்பல் ஊழியர்கள் அவதானித்திருந்ததாக, சர்வதேச கடல்சார் விடயங்கள் குறித்து அறிக்கையிடும் Flash 24×7 இணையத்தளத்தில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment