கண்டி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களுடைய உடல்களை கண்டி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடங்களை தொழில்நுட்ப குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று யட்டிநுவர பிரதே சபையின் உறுப்பினர் வசீர் முக்தார் தெரிவித்தார்.
அவர் தொடந்து கருத்து தெரிவிக்கையில் அந்த வகையில் ஜம்மிய்யதுல் உலமா சபையினால் பரிந்துரை செய்யப்பட்ட தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள கும்புக்கந்துற மையவாடி, அக்குறணை தாய் பள்ளக்கு உரித்தான ஸாஹிராதெனியவில் அமைந்துள்ள மையவாடி, யட்டிநுவர பிரதேசத்திலுள்ள தெஹிஅங்கை இஸ்மததஹேன மையவாடி என்பவற்றை தொழிநுட்ப குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு பரிசீலனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நிஹால் வீரசூர்யாவிடம் பிரதேச சபை உறுப்பினர் வசீர் முக்தார் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மத்திய மாகாண ஆளுநர், மத்திய மாகாண ஆணையாளர் மற்றும் மத்திய மாகாண பிரதான செயலாளர் ஆகியோர் இது சம்பந்தமாக ஆராய்து கண்டி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்வதற்கான தகுந்த பொருத்தமான இடங்களை பரிசீலனை செய்வதற்காக மத்திய மாகாண உதவி செயலாளர் திருமதி மஞ்சுளா தலைமையின் கீழ் ஒரு தொழில்நுட்ப குழுவொன்றை நியமித்துள்ளனர்.
இந்தக்குழுவில் சுற்றாடல் திணைக்களம், நீர் வளங்கள் திணைக்களம், மத்திய மாகாண சுகாதார அமைச்சு ஆகிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்
கண்டி மாவட்ட ஜமியத்துல் உலமா கண்டி மாவட்டத்தின் பிரதான முஸ்லிம் ஊர்களில் உள்ள பள்ளி நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை நடத்தி சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டல்களுக்கு அமைய கோவிட் தொற்றினால் உயிரிழந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக பொருத்தமான சில குறிப்பிட்ட ஊர்களில் அமைந்திருக்கும் மையவாடிகளையும் பரிந்துரை செய்து இருந்தார். இதற்கமைய தொழிநுட்ப குழுவினர் குறித்த பகுதியில் உள்ள இடங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மாவத்தகம நிருபர்
No comments:
Post a Comment