அல்குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ரமழான் நோன்பின் மூலம் மத, ஆன்மீக ரீதியாக உலகிற்கு மிக முக்கியமான செய்தி வெளிப்படுத்தப்படுகிறது - நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

அல்குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ரமழான் நோன்பின் மூலம் மத, ஆன்மீக ரீதியாக உலகிற்கு மிக முக்கியமான செய்தி வெளிப்படுத்தப்படுகிறது - நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ரமழான் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியதாவது, ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் ஃபிதர் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாத்தின் புனித நூலான அல்-குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வகையில் அனுட்டிக்கப்படும் ஒரு மாத கால ரமழான் நோன்பின் மூலம், மத ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உலகிற்கு மிக முக்கியமான செய்தி வெளிப்படுத்தப்படுகிறது.

நோன்பு காலத்தில் பிறரது பசி பற்றிய சரியான புரிந்துணர்வுடன், விட்டு கொடுப்பு மிகுந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப இஸ்லாமியர்கள் எவ்வித உயர்வு தாழ்வுமின்றி ஒன்றிணைவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.

மத ரீதியான முறையான போதனைகளை கற்ற ஒழுக்கம் மிகுந்த இஸ்லாமியர்கள் வரலாறு முழுவதும் இலங்கை சமூகத்தில் பிற இனங்கள் மற்றும் மதங்களுடன் ஒருவருக்கொருவர் மிகுந்த நட்புடன் செயற்பட்டுள்ளனர்.

இந்த நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் முன்னோக்கி செல்ல முஸ்லிம் மக்களுக்கு உள்ள அவசியத்தை ஒரு அரசாங்கமாக நாம் புரிந்துகொண்டுள்ளோம் என்பதையும் இன்று போன்றதொரு தினத்தில் நினைவுபடுத்த வேண்டும்.

உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொவிட் தொற்று நிலைமை காரணமாக கடந்த ஆண்டு போன்றே இந்த வருடமும் ஈதுல் ஃபிதர் சடங்குகளை பாரியளவிலான பண்டிகையாக கொண்டாட முடியாத போதிலும், இது சார்ந்த மத சடங்குகளை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

நோன்பு காலத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வழிபாட்டிற்காக பள்ளிவாசல்களுக்கு செல்லாது தமது வீடுகளில் இருந்தவாறு சமய சடங்குகளை மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்ட அனைத்து இஸ்லாமியர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முழு உலகமும் இவ்வாறானதொரு தொற்று நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள காலத்தில் ரமழான் நோன்பின் மூலம் அர்த்தப்படுத்தப்படும் மத விழுமியங்களை அனைவரின் நலனுக்காக பயன்படுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இன்றைய ஈதுல் ஃபிதர் திருநாள் இறை ஆசீர்வாதத்துடனான, நோய் அச்சமற்ற அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த சிறந்த நாளாக அமைய பிரார்த்திக்கின்றேன்.

No comments:

Post a Comment