வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக இந்தியர்களை தனிமைப்படுத்தி இலங்கை பிரஜைகளின் உயிரை அச்சுறுத்தலுக்குள்ளாக்க வேண்டாம் - திஸ்ஸ அத்தனாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 4, 2021

வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக இந்தியர்களை தனிமைப்படுத்தி இலங்கை பிரஜைகளின் உயிரை அச்சுறுத்தலுக்குள்ளாக்க வேண்டாம் - திஸ்ஸ அத்தனாயக்க

எம்.மனோசித்ரா

கொவிட் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதை விடுத்து குறுகிய நோக்கங்களுக்காக அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படக்கூடாது. வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தியர்களை நாட்டில் தனிமைப்படுத்தி இலங்கை பிரஜைகளின் உயிரை அச்சுறுத்தலுக்குள்ளாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், முதலாம், இரண்டாம் கொவிட் அலைகளை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படவில்லை. மாறாக நாட்டில் சமூகப்பரவல் ஏற்படவில்லை என்று காண்பிப்பதற்கே அரசாங்கம் முயற்சித்தது. அதனால் புத்தாண்டின் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது.

வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள இவ்வாறான நிலையில் போதுமானளவு பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்யக்கூடிய வசதிகள் இல்லை. வருமானத்தை மாத்திரமே இலக்காகக் கொண்டு இந்தியர்களை நாட்டுக்குள் தனிமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் திட்டமிட்டு முறையாக முன்னெடுக்கப்படவில்லை.

தற்போது மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள போதிலும், அவற்றைக் கட்டுப்படுத்த முறையான தேசிய வேலைத்திட்டமெதுவும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் நாம் எதிர்கட்சி என்ற ரீதியில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பொறுப்புடன் செயற்படுகின்றோம். 

நாடு பாரிய அபாயத்திற்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பட செயற்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசிகளை துரிதமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவுகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். தேசிய பொருளாதாரத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு முறையான விதத்தில் தீர்வு காண்பதை விடுத்து, இந்தியர்களை நாட்டில் தனிமைப்படுத்த முயற்சிப்பதன் ஊடாக வருமானம் ஈட்ட முயற்சிப்பதை கைவிட வேண்டும்.

இலங்கையில் சீனப் பெண்னொருவருக்கு முதன்முறையாக தொற்றுறுதி செய்யப்பட்ட போதே விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் மூடுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். எனினும் அரசாங்கம் மிகத் தாமதமாகவே அதனை செய்தது. 

தற்போது இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட வைரஸ் இலங்கையிலும் தீவிரமாகப் பரவுவதாக உறுதிப்படுதப்பட்டுள்ளது. அவ்வாறெனில் இங்கிலாந்து வைரஸ் எவ்வாறு இலங்கைக்குள் பரவியது ? வெளிநாட்டு பிரயாணிகள் ஊடாகவே இந்நிலைமை ஏற்பட்டிருக்கக் கூடும். 

இந்தியா தற்போது மிகவும் அபாயகட்டத்தில் உள்ளது. எனவே பணத்திற்கு முன்னுரிமையளித்து மக்களின் உயிரை அச்சுறுத்தலுக்குள்ளாக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment