தொற்று நோயியல் நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவொன்றிடம் கொவிட் தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பை ஒப்படையுங்கள் - நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 4, 2021

தொற்று நோயியல் நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவொன்றிடம் கொவிட் தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பை ஒப்படையுங்கள் - நளிந்த ஜயதிஸ்ஸ

(எம்.மனோசித்ரா)

கொவிட் பரவல் தற்போது எல்லை மீறிச் சென்றுள்ளது. எனவே இனியாவது இவ்விடயத்தில் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்காது, தொற்று நோயியல் நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினரின் அங்கத்துவம் வகிக்கின்ற குழுவொன்றை நியமித்து தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பினை அவர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், ஏப்ரல் 8 ஆம் திகதி இலங்கையில் புதிய வகை வைரஸ் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் இனங்காணப்பட்டு சுகாதார அமைச்சிற்கும் அரசாங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு கிடைத்த பின்னர் அது தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்தது? இந்த வைரஸ் தாக்கத்தினால் இளைஞர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிலைமை தீவிரமடைந்துள்ளது. எனவே இனியாவது இவ்விடயத்தில் அரசியல் தலையீடுகளுடன் தீர்மானங்களை எடுக்காமல், தொற்று நோயியல் பிரிவின் பிரதானிகள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவிடம் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை ஒப்படைக்குமாறு வலியுறுத்துகின்றோம். தொற்று நோய் பிரிவு என்பது அரசாங்கத்திற்கு ஏற்ப செயற்படுவதல்ல. அதனை சுயாதீனமாக இயங்குவதற்கு இடமளிக்க வேண்டும்.

தற்போது கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே துறையில் விசேட நிபுணத்துவம் உடையவராவார். ஆனால் அவரால் முன்வைக்கப்படுகின்ற யோசனைகள் ஏனைய அரசியல்வாதிகளால் தோற்கடிப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளால்தான் அதிருப்தியடைந்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க இராணுவத் தளபதி அரசாங்கத்தின் பேச்சாளரைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். உண்மையில் இராணுவத் தளபதிக்கு உயர்மட்டத்திலுள்ள பாதுகாப்பு பிரதானியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே அவருக்கு உத்தரவிடுகின்றார். எனவே இராணுவத் தளபதியை அவருக்குரிய பணியில் மாத்திரம் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கொவிட் கட்டுப்பாடு தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கு தொற்று நோயியல் நிபுணர்கள் அடங்கிய முன்னிலை சுகாதார அதிகாரிகளை உள்ளடக்கிய பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். இதனையே முதலாம் அலை ஏற்பட்ட காலத்திலிருந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். 

நிலைமை தீவிரமடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் கூட 24 மணித்தியாலங்களுக்குள் முடிவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு பி.சி.ஆர். பரிசோதனை கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. இது மாத்திரமின்றி மேலதிக ஒட்சிசன் உற்பத்தி, தீவிர சிகிச்சை பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்ட சகல விடயங்களிலும் அரசாங்கம் முறையான தீர்வுகளை எடுக்க வேண்டும். 

அத்தோடு தொற்று நோயியல் நிபுணர்கள் உள்ளடங்கிய சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவொன்றிடம் கொவிட் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கான பொறுப்பை ஒப்படைக்குமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment