வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா...! - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா...!

வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் ஆய்வுகூடங்களில் 824 பேரின் மாதிரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 37 பேருக்கும், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா மூவருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில், கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 21 பேருக்கு வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் 30 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனைவிட, உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் எட்டுப் பேருக்கும் யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற ஆறு பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த மூவருக்குத் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad