தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 40 வருடங்கள் ! - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 40 வருடங்கள் !

கடந்த 1981 ஜூன் மாதம் யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் அழியாக் காயம் ஒன்றை ஏற்படுத்திய சம்பவமாகும். இந்த துர்ப்பாக்கிய கரிநாள் நிகழ்ந்து இன்றுடன் 40 வருடங்களாகியுள்ளது.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் பெரும்பான்மையின பொலிஸாரினால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.

யாழ் நூலகம் க.மு. செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. 1933 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்தி வந்த நூல் நிலையமே இதுவாகும்.

இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பாவும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ். வைத்தியசலை வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.

1936 க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணி தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.

1981 யாழ்ப்பாண நகரம் எரிப்பு அல்லது பொதுவாக யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு (Burning of Jaffna Public Library) என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திததி இரவு வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது.

1981 மே 31 இரவு ஆரம்பமான இவ்வன்முறைகளின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன.

இந்நிகழ்வு 20 ஆம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.

இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.

அக்காலத்தில் இருந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் இருவர் அதிகாரிகள் மற்றும் பெரும் பொலிஸ் படையுடன் யாழ். மாவட்ட சபைத் தேர்தலைக் கவனிப்பதற்காக வருகை தந்திருந்த நிலையிலேயே யாழ் நூலகமும், யாழ் நகரமும் எரித்து சாம்பராக்கப்பட்டது.

நூலகம் எரிக்கப்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் அழியாக் காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.

2003 ஆம் ஆண்டு இந்த நூலகம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad