விமான நிலைய திறப்பின் பின் கட்டாரிலிருந்து இரு விமானங்கள் இலங்கையை வந்தடைந்தது - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

விமான நிலைய திறப்பின் பின் கட்டாரிலிருந்து இரு விமானங்கள் இலங்கையை வந்தடைந்தது

பயணிகளின் வருகைக்காக நாட்டில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் கட்டாரிலிருந்து இரு விமானங்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (1) அதிகாலை தரையிறங்கியுள்ளது.

அதன்படி தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று அதிகாலை 02.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானத்தில் வெளிநாட்டு பயணிகள் உட்பட மொத்தம் 53 பேர் வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த விமானத்தைத் தொடர்ந்து தோஹாவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் - 216 என்ற விமானம் அதிகாலை 04.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அதில் 116 பயணிகள் வந்திருந்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

புதுவருட கொவிட் கொத்தணி தாக்கத்தை கருத்திற் கொண்டு இலங்கைக்கான அனைத்து பயணிகள் விமான சேவைகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் யோசனைக்கு அமைய இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கமைய நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் இன்று செவ்வாய்கிழமை திறக்க கொவிட் கட்டுப்பாட்டு தேசிய மையம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கைக்கு வரும் விமானத்தில் 75 பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாமிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கும், விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கும் மறு அறிவித்தல் வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad