தமிழர்களின் பூர்வீக முல்லைத்தீவு - குருந்தூர் மலைக்கு, கடந்த 10.05.2021 அன்றிலிருந்து பௌத்த பிக்குகள், இரணுவத்தினர், உள்ளிட்ட பலரும் பாரிய அளவில் செல்வதாகவும் அங்கு பாரிய அளவில் நிகழ்வொன்று இடம்பெறுவதற்கான ஆயத்தப் பணிகள் இடம்பெறுவதாகவும் அப்பகுதி மக்கள் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.
அத்தோடு என்றுமில்லாதவாறு ஆறுமுகத்தான் குளம், தண்ணி முறிப்புப் பகுதிகளில் இராணுவம் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவதாகவும், அவ்வாறு பாதுகாப்புக் கடமையிலுள்ள இராணுவத்தினர் குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளிலுள்ள வயல் நிலங்களுக்கு செல்பவர்களை வழிமறிப்பதாகவும் மக்களால் மேலும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 11.05.2021 நேற்றுமுன்தினம் குருந்தூர் மலைப் பகுதிக்குச் சென்ற ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் அங்குள்ள நிலைமைளைப் பார்வையிட்டனர். அப்போது அங்கே இராணுவத்தினர் கொவிட்-19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதமை தொடர்பில் ரவிகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ரவிகரன், கொவிட்-19 சுகாதார நடைமுறைகளுக்கு மாறாக யாராவது செயற்பட்டாலோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாராவது செய்ய முற்பட்டாலோ தராதரமின்றி அனைவரையும் கைது செய்வோம் என இராணுவத் தளபதி அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் நிலையில், இங்கு இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் சுகாதார நடைமுறைகளை மீறி பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்படுகின்றனர். எனவே இவர்களுக்குரிய நடவடிக்கை என்ன என அவர்கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், குருந்தூர் மலையில் 10.05.2021 அன்று இரவு தொடக்கம் ஏதோ இடம்பெறுகின்றது என அப்பகுதிமக்கள் என்னிடம் முறையிட்டிருந்தனர்.
குறிப்பாக குமுழமுனை, ஆறுமுகத்தான் குளம் மற்றும் தண்ணிமுறிப்பு வயல்களில் வேலை செய்கின்ற பொதுமக்கள் எனப் பலராலும் எங்களுக்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்தன.
இந்நிலையில் 10.05.2021 அன்று இரவு உடனேயே செல்ல முடியாத நிலையில், 11.05.2021 நேற்றுமுன்தினம் குருந்தூர் மலைக்குச் சென்றிருந்தோம்.
அங்கு குருந்தூர் மலைக்குச் செல்லும் வழியில் ஆறுமுகத்தான் குளத்திலிருந்து கிட்டத்தட்ட நான்கு இடங்களில் இராணுவத்தினர் இருவர் அல்லது வீதம் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அத்தோடு குருந்தூர் மலைக்கு நுழையும் வீதியில் குருந்தூர் மலைக்கு அண்மையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரு இராணுவத்தினர் எம்மை அங்கு செல்லவிடாது தடுத்திருந்தனர்.
அப்போது குருந்தூர்மலைப் பகுதியிலிருந்து பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியேறிக் கொண்டிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
இந்நிலையில் நாம் குருந்தூர் மலைக்குச் செல்ல வேண்டும் என அந்த இராணுவத்தினரிடம் வலியுறுத்தியிருந்த நிலையில், குறித்த இராணுவத்தினர், தொலைபேசி அழைப்பு ஒன்றினை ஏற்படுத்திவிட்டு உள்ளே செல்வதற்கு அனுமதித்திருந்தனர்.
அந்த வகையில் நேரடியாக நாம் குருந்தூர் மலை அடிவாரத்திற்குச் சென்றிருந்தோம். அங்கு தொல்லியல் திணைக்களத்தினரும், அதிகளவான இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
அங்கு 10.05.2021 அன்று பாரிய அளவில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றமை குறித்தும் அங்கிருந்த இராணுவத்தினரிடம் கேள்வி எழுப்பியிருந்தோம்.
பௌத்த பிக்குகளும், வழிபாடுகளுக்குரியவர்களும், இராணுவத்தினரும்தான் அங்கு வருகை தந்ததாக இராணுவத்தினர் பதிலளித்திருந்தனர்.
அதேவேளை அங்கிருந்த இராணுவத்தினர், மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் கொவிட்-19 சுகாதார நடைமுறைகளைப் பேணாதிருந்ததையும் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.
அந்த வகையில் இராணுவத் தளபதி கொவிட்-19 சுகாதார நடைமுறைகளில் இறுக்கமான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் ஏன் கொவிட்-19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என அவர்களிடம் கேள்விஎழுப்பியிருந்தோம், அப்போது அங்கிருந்தவர்கள் சற்றுத் தடுமாறியதுடன், உடனேயே அவர்கள் முகக் கவசங்களையும் அணிந்துகொண்டனர்.
இந்நிலையில் நாங்கள் மலை அடிவாரத்திலிருந்து, குருந்தூர் மலையின் மேற்பகுதிக்குச் செல்ல வேண்டும், அங்கு நாம் எமது சமய வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டபோது அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்கள். குருந்தூர் மலையின் மேற்பகுதிக்குச் செல்ல வேண்டுமானால் தொல்லியல் திணைக்களத்தினுடைய அனுமதி பெறப்பட வேண்டும் எனவும், அவ்வாறு அனுமதி பெற்றுவந்தால் மலையின் மேற்பகுதிக்குச் செல்ல அனுமதிப்பதாகத் தெரிவித்தனர்.
அப்படி எனில் 10.05.2021 இடம்பெற்ற நிகழ்விற்கு வந்தவர்கள் அனுமதிகளைப் பெற்று வந்தார்களா எனக் கேள்வி எழுப்பியபோது அவர்கள் அனுமதிகளைப் பெற்றே வந்ததாக இராணுவத்தினர் தெரிவித்தார்கள்.
இது தொடர்பில் அப்பகுதி பொதுமக்கள் என்னிடம் முறையிடும்போது, பௌத்த பிக்குகள் கிட்டத்தட்ட 29 பேர் அங்கு வந்திருந்ததாகவும், அத்தோடு கிட்டத்தட்ட 30 முச்சக்கர வண்டிகள் அங்கு வந்ததாகவும் அதில் வந்தவர்கள் பொதுமக்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
இதுதவிர ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய நட்சத்திரத் தரங்களில் உள்ள அதி சொகுசு இராணுவ வாகனங்கள், ஐம்பதிற்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள், இராணுவ வாகனங்கள் என பல வாகனங்கள் அங்கு சென்றதாகவும் பொதுமக்கள் எம்மிடம் முறையிட்டிருந்தனர்.
இந்த விடயத்திலே குறிப்பாக, முல்லைத்தீவு என்பது தமிழர்களுடைய இடமாகும். இதிலே குருந்தூர் மலையானது எங்களுடைய தமிழ் மக்களுக்குரிய மலையாகும். இங்கு எமது தமிழ் மக்கள் பூர்வீகமாக ஐயனார் வழிபாடுகளைச் செய்ததுடன், குருந்தூர் மலையினை அண்டிய பகுதிகளில் எமது தமிழ் மக்கள் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.
அவ்வாறு பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும் எமது தமிழ் மக்களுக்கு குருந்தூர் மலையில் உள்ள ஐயனார் காவல் தெய்வமாக இருக்கின்றது. என எமது தமிழ் மக்கள் நம்புகின்றனர்.
இப்படியாக தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையை, சிங்கள மயப்படுத்தத் தீவிரப்படுத்தியிருக்கின்றார்கள்.
இது தவிர கொவிட்-19 சுகாதார நடமுறைகளுக்கு மாறாக யாராவது செயற்பட்டாலோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாராவது செய்ய முற்பட்டாலோ தராதரமின்றி அனைவரையும் கைது செய்வோம் என இராணுவத் தளபதி அறிக்கைகளை வெளியிடுகின்றார்.
இவ்வாறிருக்க குருந்தூர் மலையில் கொவிட்-19 சுகாதார நடமுறைகளைப் பின்பற்றாத இராணுவத்தினர் கைது செய்யப்படாதது ஏன்? அவ்வாறு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத இராணுவத்தினருக்குரிய நடவடிக்கை என்ன?
அவ்வாறு இராணுவத்தினர் சுகாதார நடமுறைகளை மீறியதற்குரிய ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.
முள்ளிவாய்க்காலிலே கொவிட்-19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நினைவேந்தலை செய்தாலும் கைது செய்யப்படுவோம் என்று கூறப்படுகின்றது.
ஆனால் இங்கு கொவிட் தொற்று அசாதாரண நிலையினையும் கருத்தில் கொள்ளாது, சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படாது தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையை சிங்களமயப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் பாரிய இராணுவப் பாதுகாப்புக்களுடன் மேற்கொள்ளப்படுகின்றது. இது எந்த வகையில் நியாயம்?
அதேவேளை குருந்தூர் மலையில் இடம்பெறும் அகழ்வாராட்சி நடவடிக்கைகளில், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்ந்தவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளை இங்கு மீறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மலையின் மேற்பகுதிக்குச் செல்வதற்கு எமக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் அறிய முடியாதுள்ளது. குறிப்பாக கட்டடங்கள்எவையாவது கட்டப்படுகின்றதா என்பது தொடர்பிலும் அறிய முடியாதுள்ளது என்றார்.
No comments:
Post a Comment