இலங்கையில் சீரற்ற காலநிலையால் 10 மாவட்டங்களில் 5,897 பேர் பாதிப்பு - 201 வீடுகள் பகுதியளவில் சேதம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 10 மாவட்டங்களில் 5,897 பேர் பாதிப்பு - 201 வீடுகள் பகுதியளவில் சேதம்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கடந்த சில தினங்களாக நிலவும் பலத்த காற்று மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 23 ஆம் திகதி முதல் நிலவும் சீரற்ற வானிலையால் நேற்று காலை வரை 1,423 குடும்பங்களைச் சேர்ந்த 5,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 201 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

பலத்த காற்று, கடும் மழை, வெள்ளம், மண் சரிவு, மரம் முறிந்து விழுந்தமை, மின்னல் தாக்கம், கற்பாறை சரிவு என்பவற்றால் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, கம்பஹா, நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி
இரத்தினபுரி மாவட்டத்தில் பலத்த காற்று, மண்சரிவு, மரம் முறிந்து விழுந்தமை, வெள்ளம், கடும் மழை என்பற்றால் இரத்தினபுரி, எலபாத்த, குருவிட்ட, நிவித்திகல, எஹெலியகொட, பெல்மடுல்ல, கிரியெல்ல, கொலொன்ன, அயகம, கல்வான, இம்புல்பே மற்றும் பலாங்கொடை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் 631 குடும்பங்களைச் சேர்ந்த 2,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 24 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் 6 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா
கம்பஹா மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக கம்பஹா, அத்தனகல, வத்தளை, பியமக மற்றும் தொம்பே பிரதேச செயலகப்பிரிவுகளில் கடந்த 3 நாட்களில் 594 குடும்பங்களைச் சேர்ந்த 2,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு, பலத்த காற்று, வெள்ளம், மரம் முறிந்து விழுந்தமை என்பவற்றால் நுவரெலியா, கொத்மலை, அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவுகளில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்தோடு 52 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் 7 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி
கண்டி மாவட்டத்தில் பலத்த காற்றின் காரணமாக கங்காவத்தகோரள, பூஜாபிட்டி, யட்டிநுவர, தெல்தோட்டை, உடுநுவர, ஹரிஸ்பத்துவ, மினிப்பே, பத்தஹேவாஹெட்ட, பஸ்பாகே, தும்பனை உள்ளிட்ட பிரதேச செயலகப்பிரிவுகளில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 44 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடும் காற்றினால் கட்டுவான, வலஸ்முல்ல மற்றும் அம்பலாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் பலத்த காற்றினால் 19 குடும்பங்களைச் சேர்ந்த 61 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச செயலகப்பிரிவில் பலத்த காற்றினால் 4 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , ஒருவர் காயமடைந்துள்ளார். இங்கு 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவு
முல்லைத்தீவில் ஒட்டுச்சுட்டான், புதுக்குடியிருப்பு, மாந்தை கிழக்கு, வெலிஓயா, துணுக்காய் உள்ளிட்ட பிரதேச செயலகப்பிரிவுகளில் பலத்த காற்றினால் 18 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மன்னார்
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர், நானாட்டான், மடு, மாந்தை மேற்கு, முசலி பிரதேச செயலகப்பிரிவுகளில் பலத்த காற்றினால் 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளார். இங்கு 13 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வவுனியா
வவுனியா மாவட்டத்தில் வவுனியா, வவுனியா தெற்கு, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவுகளில் பலத்த காற்றினால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளார். இங்கு 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், சேருவில, தம்பலகாமம் பிரதேச செயலகப்பிரிவுகளில் பலத்த காற்றினால் 11 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

காலநிலை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யக் கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் இரவு வேளைகளில் மழை பெய்யக் கூடும்.

இதேவேளை காற்றின் வேகமானது மத்தியாலத்திற்கு 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும். குறிப்பாக மத்திய மலைப்பிரதேசங்களிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் 50 கிலோ மீற்றர் வரை உயர்வடையக் கூடும்.

No comments:

Post a Comment