இலங்கை வந்த சீனக் கப்பலில் அணு, கதிரியக்க பொருட்கள் இருப்பதை மறைத்தே அனுமதி பெறப்பட்டுள்ளது - வெளியானது புதிய தகவல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

இலங்கை வந்த சீனக் கப்பலில் அணு, கதிரியக்க பொருட்கள் இருப்பதை மறைத்தே அனுமதி பெறப்பட்டுள்ளது - வெளியானது புதிய தகவல்

(எம்.எப்.எம்.பஸீர்)

அணு மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் எனும் கதிரியக்க உலோகம் அடங்கிய, சீன கப்பலொன்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரேவேசித்தமையால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஐரோப்பாவின் பெரிய துறைமுகமாக கருதப்படும் நெதர்லாந்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து இருந்து சீனா நோக்கி பயணிக்கும் போதே இந்த கப்பல் இயந்திரக்கோளாறு காரணமாக, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளது.

இவ்வாறு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியை, அக்கப்பலின் இலங்கை பிரதிநிதி ஊடாக, இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையிடமிருந்து அக்கப்பல் பெற்றிருந்ததாக அறிய முடிகின்றது.

எவ்வாறாயினும் கதிரியக்க பொருட்களுடன் கப்பலொன்று, இலங்கை அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் அனுமதியைப் பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் குறித்த சீன கப்பலானது, அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைந்த பின்னர், அக்கப்பலில் இருந்த கொள்கலன்களுக்குள் யுரேனியம் எனும் கதிரியக்க பதார்த்தம் இருப்பது தொடர்பில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டாளருக்கு தெரியவந்துள்ளது.

அந்த தகவலை அவர், இலங்கை அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை மற்றும் இலங்கை அனுசக்தி கட்டுப்பாட்டு சபை ஆகியவற்றுக்கு அறிவித்ததை அடுத்து, உடனடியாக குறித்த கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து வெளியேற அறிவித்தல் விடுத்ததாக இலங்கை அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேர்வையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

இவ்வாறான பின்னணியில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சார் நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ள நிலையில், இது தொடர்பில் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வாவிடம்  வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த கெப்டன் இந்திக டி சில்வா, குறித்த கப்பலானது துறைமுகத்துக்குள் சட்ட விரோதமாக நுழையவில்லை என தெரிவித்தார்.

அத்துடன் 'சர்வதேச அளவில் இவ்வாறான பொருட்களை கப்பல்களில் கொண்டு செல்வது தடை செய்யப்பட்ட விடயமல்ல.

எனினும் எமது நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்கு அமைய அக்கப்பலை எமது துறைமுகத்திலிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி அக்கப்பல் எமது துறைமுகத்திலிருந்து வெளியேறியுள்ளது. துறைமுகத்திற்கு வெளியில் அக்கப்பல் தற்போது (நேற்று நண்பகல்) நங்கூரமிடப்பட்டிருந்தது.

இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டதன் பின்னர் அக்கப்பல் அதன் பயணத்தை தொடரும் என எதிர்ப்பார்க்கிறோம்.' என கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில், இலங்கை அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் அனில் ரஞ்சித்திடம் வினவப்பட்ட போது அவர் இது குறித்து விளக்கமளித்தார்.

'நெதர்லாந்திலிருந்து சீனா நோக்கி பயணிக்கும் வழியே ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, அதனை சரி செய்துகொள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசிக்க குறித்த கப்பல் அனுமதி கோரியுள்ளது.

அக்கப்பலின் இந்நாட்டு பிரதிநிதி ஊடாக இந்த அனுமதி துறைமுக அதிகார சபையிடம் கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியும் அந்த அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

உண்மையில் அவ்வாறு அனுமதி கோரி உள் நுழையும் கப்பலில் உள்ள பொருட்கள் தொடர்பில் முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். எனினும் குறித்த கப்பலின் உள்நாட்டு பிரதிநிதி அக்கப்பலில் கதிரியக்க பொருட்கள் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்படல் வேண்டும் என அவர் கூறினார்.

அவ்வாறு அனுமதி வழங்கப்படும் போது, குறித்த இரசாயன பொருள் என்ன, அது எந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் .

எனினும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலுக்கு அவ்வாறான இரசாயன, கதிரியக்க பொருட்களை கொண்டுவர எவ்வித அனுமதியும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டாளர் தந்த தகவல் பிரகாரம், எமது குழுவொன்றும் அம்பாந்தோட்டைக்கு சென்றது. இவ்வாறான நிலையில் கப்பலில், கதிரியக்க உலோகமான, அணு மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் இருப்பது பின்னர் எம்மால் கண்டறியப்பட்டது. 

இதனால் துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு நாம் பணிப்புரை விடுத்தோம்.' என அணு சக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், இந்த விடயம் தொடர்பில் தற்போது விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கப்பலின் உள்நாட்டு பிரதிநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment