தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு உறுதியான ஒத்துழைப்பை வழங்குவோம் - இந்தியா - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு உறுதியான ஒத்துழைப்பை வழங்குவோம் - இந்தியா

(எம்.மனோசித்ரா)

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை மக்களுடனும் அரசாங்கத்துடனும் இந்தியா உறுதியான ஒத்துழைப்பை வழங்கும். அத்தோடு போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதிலும் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்கள் இடம்பெற்று இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்று புதன்கிழமை கொழும்பு - கொச்சிக்கடை, புனித அந்தோனி திருத்தலத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்து கொண்டார்.

தாக்குதலில் பலியானவர்களின் நினைவாக அவர் மெழுகுவர்த்தியை ஏற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது அத்தியாவசிய மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றுடன் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தடைந்த விசேட விமானத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி நாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து 14 நாள் தனிமைப்படுத்தப்படுத்தலை நிறைவு செய்து, அன்றையதினமே (மே 23) உயர்ஸ்தானிகர் கொச்சிக்கடை திருத்தலத்திற்குச் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இதேபோன்று 2019 ஜூன் மாதம் இலங்கை விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் திருத்தலத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு உள்ளானவற்றில் புனித அந்தோனியார் திருத்தலமும் ஒன்றாகும்.

இந்த தாக்குதல்களில் 10 இந்தியர்களும் பலியாகியுள்ளனர். ஷங்ரி-லா, கிங்ஸ்பரி மற்றும் சினமன் கிராண்ட் ஆகிய ஹோட்டல்களில் குறித்த இந்தியர்கள் 10 பேரும் பலியாகினர்.

பாதுகாப்பு தொடர்பான சகல செயற்பாடுகளிலும் இந்தியாவும் இலங்கையும் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுகின்றன.

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை மக்களுடனும் அரசாங்கத்துடனும் இந்தியா உறுதியான ஒத்துழைப்பை வழங்கும். அத்தோடு போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதிலும் இந்தியா அதன் ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குகிறது.

No comments:

Post a Comment