தமிழர்களின் நிர்வாக திறமையை சகித்துக் கொள்ள முடியாத சிங்கள அரசு, யாழ். மாநகர முதல்வரை கைது செய்துள்ளது - செல்வம் அடைக்கலநாதன் - News View

About Us

About Us

Breaking

Friday, April 9, 2021

தமிழர்களின் நிர்வாக திறமையை சகித்துக் கொள்ள முடியாத சிங்கள அரசு, யாழ். மாநகர முதல்வரை கைது செய்துள்ளது - செல்வம் அடைக்கலநாதன்

தமிழர்களின் நிர்வாக திறமையை சகித்துக் கொள்ள முடியாத சிங்கள அரசு, யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ். மாநகர சுத்தப்படுத்தும் நோக்கில் உருவாக்கிய காவல் படையை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.

இத்தனை வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த அரசினால் ஒரு மாநகர சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்கும் செயற்பாட்டை அவர்களால் செய்ய முடியவில்லை. அதனை ஒரு தமிழன் செய்து விட்டான் என்ற காழ்புணர்ச்சியில் இந்த கைது நாடகம் அரங்கேறியுள்ளது.

சீருடை காரணமாக யாழ். மாநகர காவல் படையை தடை செய்து முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை கைது செய்துள்ளமை சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

யாழ். மாநகர காவல் படையினரின் இதே வகையிலான சீருடை கொழும்பு மாநகர சபையிலும் உள்ளதாக மணிவண்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவ்வாறு விளக்கமளித்தும் மணிவண்ணனை கைது செய்திருப்பது, இந்த அரசு தமிழர்கள் எந்த வகையிலும் முன்னேறி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

சாதாரண சீருடையைப் பார்த்து அரசாங்கம் அச்சம் கொள்வது எதற்காக என்று எமக்குத் தெரியவில்லை. 

எனவே, கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு யாழ். நகரை சுத்தப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாநகர காவல் படையை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்த வேளையில் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment