மியன்மாரில் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி நடிகர் ஒருவரை இராணுவம் கைது செய்துள்ளது. அத்துடன் 120 பிரபலங்களை அது தேடி வருகிறது.
தாய்லாந்திலும் மியன்மாரிலும் பிரபலமாக உள்ள 24 வயது பெயிங் டகோ நேற்றுக் காலை கைது செய்யப்பட்டார். இராணுவத்திற்கு எதிரான போராட்டங்களில் நேரடியாகவும் சமூக ஊடகம் வழியாகவும் அவர் தீவிரமாகச் செயல்பட்டார்.
மியன்மாரில் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு நாள்தோறும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக பேசியதற்காக சுமார் 100 திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், நட்சத்திரங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வார ஆரம்பத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான சர்கனரை மியன்மார் பாதுகாப்புப் படை கைது செய்திருந்தது.
அதேபோன்று தாய்லாந்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மியன்மார் அழகு ராணியான ஹா லே இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக கடந்த வாரம் உரையாற்றியிருந்தார்.
மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டங்களில் 600 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment