இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்போது அவர் எய்மஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமுலில் உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதேவேளை, கொரோனாத் தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த ஏதுவாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை மன்மோகன் சிங் எழுதியிருந்தார்.
அதில் நாட்டு மக்கள் மீண்டும் எப்போது தங்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நோய்த்தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மிகவும் அதிகம். அதிலும் குறிப்பாக நாம் நாட்டில் தடுப்பூசி விநியோகத்தையும், பயன்பாட்டையும் அதிகரிப்பது எப்படி என்பதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment