ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொழிலாளர் தினத்தை தனித்து நடத்துவதா அல்லது ஏனைய கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்வதா என இதுவரை தீர்மானிக்கவில்லை என கட்சியின் உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் சில்வா தெரிவித்தார்.
எதிர்வரும் மே தினத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து கொண்டாட தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை நாங்கள் கொண்டாடுவோம். மே தினத்துக்கு மிகவும் விசேடமான கட்சியாவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும். ஏனெனில் தொழிலாளர் தினத்தை அரச விடுமுறை தினமாக்கியது, தொழிலாளர்களுக்கு பாரியளவில் வரப்பிரசாதங்களை வழங்கியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகும்.
அத்துடன் எதிர்வரும் தொழிலாளர் தின பிரதான நிகழ்வை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர்களுடன் தனித்து மேற்கொள்வதா அல்லது அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்வதா என இதுவரை இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.
அது தொடர்பாகவும் மாகாண சபைத் தேர்தல் மற்றும் தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பாகவும் அரசாங்கத்துடன் கலந்துரையாட இருக்கின்றோம். அதன் பின்னரே மே தினம் தொடர்பாக தீர்மானம் எடுப்போம்.
மேலும் மாகாண சபை முறைமைக்கு கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கின்றோம். மாகாண சபைகள் மக்கள் பிரதிகளுடனே செயற்படுத்தப்பட வேண்டும். மாகாண சபைகள் மூலம் மக்களுக்கு பாரிய சேவையை மேற்கொள்ள முடியுமாகின்றது.
அதனால் தற்போதுள்ள மாகாண சபை முறைமைக்கு அப்பாற் சென்று மாவட்ட மத்தியில் அதிகார பரவலாக்கும் முறைமைக்கு நாங்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றோம்.
No comments:
Post a Comment