தனி நாடாக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது - சீனாவின் நெடுநாள் திட்டம் தற்போது வெளிப்பட்டுள்ளது - இலங்கை பல்துறையில் வீழ்ச்சியடைந்துள்ளது : விஜயதாஸ ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Thursday, April 15, 2021

தனி நாடாக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது - சீனாவின் நெடுநாள் திட்டம் தற்போது வெளிப்பட்டுள்ளது - இலங்கை பல்துறையில் வீழ்ச்சியடைந்துள்ளது : விஜயதாஸ ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

தனி நாடாக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது. சீனாவின் நெடுநாள் திட்டம் தற்போது வெளிப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு நீதிமன்ற கட்டமைப்புக்கும், இலங்கையின் ஆட்புல எல்லைக்கும் முரணாக காணப்படுகிறது. இலங்கையின் தலைநகருக்கும், மேல் மாகாணத்திற்கும் சவால் விடுக்கும் வகையில் இதனால் துறைமுக நகரம் காணப்படுகிறது. விசேட ஆணைக்குழு சட்ட மூலத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என முன்னாள் நீதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு இன்று பல்துறையில் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி, எல்லை கடந்த அரச முறை கடன் நெருக்கடி, சுகாதாரமற்ற உணவு பயன்பாடு என பல தரபபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. பொருளாதார மட்டத்தில் இலங்கை அச்சுறுத்தலான தன்மையினை நோக்கி நகர்கின்றது என்பதை குறிப்பிட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட முறையற்ற அரச முறை கடன்களினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒப்பந்த அடிப்படையில் விற்க நேரிட்டது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சீனாவிற்கு வழங்குவதற்கு அக்காலக்கட்டத்தில் அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். இதனால் அப்போது வகித்த நீதியமைச்சர் பதவி மாத்திரம் பறிபோனது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை அரச தலைவர்கள் இன்று அனுபவ ரீதியில் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

ஏனையோரை காட்டிலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் பாடம் புகட்டியுள்ளார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கியதால் ஏற்பட்ட விளைவுகளை காட்டிலும் பன்மடங்கு விளைவு கொழும்பு துறைமுக பொருளாதார வலய ஆணைக்குழு சட்ட மூலத்தினால் ஏற்படும்.

இலங்கையின் ஆட்புல மற்றும் கடல் எல்லை ஆகியவை அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் காலி முகத்திடலில் ஒரு 644 ஹெக்டயார் கடற்பரப்பு மணலால் நிரப்பப்பட்டு கொழும்பு துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது.

இந்நிலப்பரப்பினை இலங்கையின் மொத்த பரப்பளவிற்குள் உள்வாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசேட ஆணைக்குழு கொழும்பு துறைமுகத்தை தனித்த ஒரு பகுதியாக காண்பித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நீதியமைச்சின் சட்டம் மூலம் சபை முதல்வரினால் கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

சர்வதேச வர்த்தகம், கப்பற் தொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரை கடந்த வங்கித் தொழில், நிதிசார் சேவைகள் தகவல் தொழினுட்பம், வியாபார வழிமுறைகள், வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தல், கூட்டிணைக்கப்பட்ட தலைமையங்களின் தொழிற்பாடு, பிராந்திய விநியோக தொழிற்பாடுகள், சுற்றுலா பயணத்துறை மற்றும் வேறு துறை சேவைகளை மேம்படுத்துவது ஆணைக்குழுவின் நோக்கமாகும் என குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment