சிங்கராஜ வனத்தை சீனாவுக்கு விற்பனை செய்யாதே ! அரசாங்கத்தை கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஐ.நா. அலுவலகத்தில் மகஜரையும் கையளித்தது ஐக்கிய தேசிய கட்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 6, 2021

சிங்கராஜ வனத்தை சீனாவுக்கு விற்பனை செய்யாதே ! அரசாங்கத்தை கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஐ.நா. அலுவலகத்தில் மகஜரையும் கையளித்தது ஐக்கிய தேசிய கட்சி

(செ.தேன்மொழி)

சிங்கராஜ வனத்தை சீனாவுக்கு விற்பனை செய்ய வேண்டாமென அரசாங்கத்தை கண்டித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஐக்கிய தேசிய கட்சியினர் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் முறைப்பாட்டு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

சிங்கராஜ வன அழிப்பு உட்பட நாட்டில் இடம்பெற்று வரும் சுற்றுச்சூழல் அழிப்புக்களை கண்டித்தும் அதற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய தேசிய கட்சி இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டது.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

சுற்றுச்சூழல் அழிப்புக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தலைமை தாங்கியிருந்ததுடன், கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம், தவிசாளர் வஜிர அபேவர்தன, கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான, சந்தீப் சமரசிங்க, ஆசூ மாரசிங்க மற்றும் சனத் ரத்னபிரிய உட்பட கட்சியின் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

சுமார் நூற்றுக்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், இதன்போது ஆர்பாட்டகாரர்களில் சிலர் செயற்கை சுவாசக் கருவிகளை அணிந்து கொண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்பாட்டகாரர்கள், சிங்கராஜ வனத்தை பாதுகாப்போம், கடந்த காலத்தை விட தற்போது வெப்பம் அதிகம்தானே நண்பர்களே, எதிர்காலத்தில் மரஞ்செடிகளை புகைப்படத்தில் மாத்திரம்தான் காணமுடியுமா ? ஆகிய சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எமக்கு வேண்டாம், சிங்கராஜ வனத்தை சீனாவுக்கு விற்பனை செய்ய வேண்டாம், காட்டை அழித்து சுவாசிப்பதற்கான ஒட்சிசனை இல்லாதொழிக்க வேண்டாம், 'தேவனி, பாக்யாவின் குரலை கட்டுபடுத்த முயற்சிக்க வேண்டம்', 'நீங்கள் கூறிய வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தோம், இன்று சுவாசிப்பதற்காக போராட வேண்டியுள்ளது', 'எமது எதிர்கால தலைமுறையினர் சுவாசிப்பதற்கான ஒட்சிசனை பாதுகாத்து வைத்திருங்கள், மரங்களை வெட்டுவதை நிறுத்துங்கள் போன்ற கோசங்களையும் ஆர்ப்பாட்டகாரர்கள் எழுப்பியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்தில் மகஜரை கையளித்ததும், சிறிது நேரம் கோசம் எழுப்பிக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment