அனுமதி வழங்காத சினோபார்ம் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ள அரசாங்கம்...! மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிக்கும் ஜே.வி.பி. - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

அனுமதி வழங்காத சினோபார்ம் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ள அரசாங்கம்...! மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிக்கும் ஜே.வி.பி.

(எம்.மனோசித்ரா)

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டு மக்களின் உயிருடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனம், தேசிய மருந்துகள் கட்டுபாட்டு அதிகார சபை மற்றும் தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் குழு என்பன அனுமதி வழங்காத சினோபார்ம் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் தடுப்பூசி விடயத்தில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்க நேரிடுமாயின் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அது பாரிய அச்சுறுத்தலாக அமையும். எனவே அரசாங்கம் மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், எந்வொரு நோய்க்கான தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டாலும் 3 கட்டங்களாக பிராணிகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு சர்வதேச அங்கீகாரம் கிடைத்த பின்னரே மனிதர்களுக்கு வழங்கப்படும். இந்த அங்கீகாரம் கிடைத்த பின்னரும் நான்காவதாகவும் பரிசோதனை முன்னெடுக்கப்படும். 

இந்நிலையில் கொவிட் தடுப்பிற்காக கண்டு பிடிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கினாலும் அதனை பயன்படுத்த தீர்மானிக்கும் ஒவ்வொரு நாடுகளும் அது தொடர்பில் ஆராயும் நிறுவனங்களின் ஊடாக ஆராய்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு தேவையானளவு தடுப்பூசிகள் தற்போது அரசாங்கத்திடம் கைவசம் இல்லை. அதற்காக இரண்டாம் கட்டமாக வேறொரு தடுப்பூசியை வழங்கக்கூடாது. எனவே அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை துரிதமாக பெற்றுக் கொள்ளவே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசிக்கு தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்காத அதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனமும் அனுமதி வழங்கவில்லை.

தடுப்பூசிகள் தொடர்பில் ஆராய்வதற்காக 2017 இல் நியமிக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர்கள் 8 பேர் அடங்கிய குழுவும் இதற்கு அனுமதிவழங்கவில்லை. இந்த குழு சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் மாத்திரம் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டதல்ல என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி, பிரதமர் அல்லது சுகாதார அமைச்சருக்கு தடுப்பூசிகள் சிறந்தவையா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியாது. அதற்காகவே சட்ட முறைப்படி இவ்வாறான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. எனினும் சினோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள விசேட நிபுணர் குழுவின் அங்கத்தவர்கள் சுகாதார அமைச்சரால் நீக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறு இதுவரையில் 7 உறுப்பினர்கள் இக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் தடுப்பூசி விடயத்தில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லாமல் போகுமாயின் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அது பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

அரசாங்கம் நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை பாதுக்காக்க வேண்டுமாயின் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசிகளையே நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்.

எனவே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் கடனை மீள செலுத்த வேண்டிய தேவைக்காகவும் இவ்வாறு மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment