ஜனாதிபதி கோத்தாபயவிடம் இன்று கையளிக்கப்படவுள்ள அமைச்சரவை உப குழுவின் இறுதி அறிக்கை - News View

Breaking

Post Top Ad

Sunday, April 4, 2021

ஜனாதிபதி கோத்தாபயவிடம் இன்று கையளிக்கப்படவுள்ள அமைச்சரவை உப குழுவின் இறுதி அறிக்கை

(எம்.எப்.எம்.பஸீர்)

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் இறுதி அறிக்கை இன்று (05) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான குறித்த உப குழுவின் நடவடிக்கைகள் நிறைவடைந்து, அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக குழுவின் செயலாளர், ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் சட்டத்தரணி ஹரிகுப்தா ரோஹனதீர குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 தாக்குதல் என அறியப்படும் 2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கை ஆகியவற்றை ஆராய, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் பிரத்தியேக அறுவர் கொண்ட குழு கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன் பில, பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரண, ரோஹித்த அபேகுனவர்தன ஆகியோர் அந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள வெளிப்படுத்தல்கள், பரிந்துரைகள் ஆகியவற்றையும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் வெளிப்படுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளையும் அலசி ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற பொறுப்பு இந்த குழுவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த குழுவுக்கு தேவையான அடிப்படைவசதிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு, ஜனாதிபதி செயலகத்தின் சட்டப் பிரிவு பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹணதீர குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த 6 பேர் கொண்ட குழுவானது, இரு அறிக்கைகளையும் ஆராய்ந்து கடந்த மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு சிறப்பு அறிக்கையொன்றினை தயார் செய்து வழங்க வேண்டும் என பொறுப்பு சாட்டப்பட்டிருந்தது.

எனினும் கொழும்பு மாவட்ட செயலகத்தில் ஒன்று கூடி குறித்த குழு, இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 15 ஆம் திகதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க தவறியது.

எனினும் ஜனாதிபதியிடம் கால அவகாசம் பெற்றுக்கொண்ட இக்குழு, தற்போது தமது ஆராய்வுகளை முடித்துள்ள நிலையிலேயே இன்று, அது குறித்த தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad