ஜோர்தானில் அரசியல் நெருக்கடி : வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் இளவரசர் ஹம்சா பின் ஹுஸைன் - News View

Breaking

Post Top Ad

Sunday, April 4, 2021

ஜோர்தானில் அரசியல் நெருக்கடி : வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் இளவரசர் ஹம்சா பின் ஹுஸைன்

ஜோர்தான் மன்னர் இரண்டாவது அப்துல்லாஹ்வின் ஒன்றுவிட்ட சகோதரர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு மூத்த அதிகாரிகள் பலரும் கைது செய்யபட்டுள்ள நிலையில் நாட்டில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அரச ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அம்மான் நகர விளிம்பில் இருக்கும் அரச மாளிகைகளுக்கு அருகில் உள்ள தபூக் பகுதியில் பெரும் எண்ணிக்கையான பொலிஸார் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தாம் வீட்டுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் முடிக்குரிய இளவரசரான ஹம்சா பின் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது சமீபத்தில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் அரசு மற்றும் மன்னர் குறித்து விமர்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் என்னை வெளியே செல்லவோ அல்லது மக்களுடன் தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கவில்லை.

கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக எங்கள் ஆளும் கட்டமைப்பில் நிலவும் மோசமடைந்து வரும் ஆளுகை முறிவு, ஊழல் மற்றும் திறமையின்மைக்கு நான் பொறுப்பேற்கவில்லை. மக்கள் தங்கள் அரசு மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் பொறுப்பல்ல.

நாட்டின் தற்போதைய சூழல் யாரும் கொடுமைப்படுத்தப்படாமலும், கைது செய்யப்படாமலும், துன்புறுத்தப்படாமலும், அச்சுறுத்தப்படாமலும் எதையும் பேசவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ முடியாத ஒரு நிலையை எட்டியுள்ளது.

எனது ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நானும் எனது குடும்பத்தினரும் அம்மானுக்கு வெளியே உள்ள அல் சலாம் அரண்மனையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளோம். தொலைபேசி, இணைய வசதி உட்பட எனது தகவல் தொடர்புகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

நான் எந்த தவறையும் செய்யவில்லை. அரசுக்கு எதிராக நடந்த எந்த சதித்திட்டத்துடனும் எனக்கு தொடர்பு இல்லை என அந்த வீடியோவில் ஹம்சா பின் ஹுஸைன் பேசியுள்ளார்.

இளவரசர் ஹம்சாவின் வழக்கறிஞரிடம் இருந்து பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த வீடியோ ஒன்றில், தமது நண்பர்கள் பலரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தமது பாதுகாப்பு அகற்றப்பட்டு இணையதள மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் எந்த ஒரு சதியிலோ அல்லது மோசமான செயலிலோ இடுபடவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் ஹம்சா, ஹாசிமித் இராச்சியம் ஊழல், குடும்ப ஆட்சி மற்றும் தவறான ஆட்சியை நடத்துவதாகவும் நிர்வாகத்தை விமர்சிப்பதற்கு எவரும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக ஜோர்தான் அரச பத்திரிகையான அல் ராய் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்போது அரச குடும்பத்தின் முன்னாள் நெருங்கிய உதவியாளரான பசம் அவதல்லா மற்றும் சரீப் ஹுஸைன் பின் செயித் உட்பட பலரும் கைது செய்யப்பட்டிருப்பதாக பெட்ரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஜோர்தானை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்த மன்னர் ஹுஸைனுக்கும், அவரது 4ஆவது அமெரிக்க மனைவியான ராணி நூருக்கும் பிறந்த மூத்த மகன்தான் இந்த ஹம்சா பின் ஹுஸைன். அவர் அப்துல்லாஹ்வுடன் நெருக்கமான உறவை கொண்டிருப்பதோடு பழங்குடித் தலைவர்களிடத்திலும் பிரபலமானவராக உள்ளார்.

மரணித்த மன்னர் ஹுஸைனின் இறுதி விருப்பாக 1999 ஆம் ஆண்டு ஹம்ஸாவை முடிக்குரிய இளவரசராக அப்துல்லா நியமித்தபோதும், 2004 இல் அந்தப் பட்டத்தை பறித்து அதனை தனது மூத்த மகனான ஹுஸைனுக்கு வழங்கினார்.

எனினும் தற்போது எந்த பதவியும் வகிக்காத இளவரசர் ஹம்சா கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதை இராணுவம் கடந்த சனிக்கிழமை மறுத்தது.

“இளவரசர் ஹம்சா கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை”' என்று கூட்டுத் தளபதிகளின் பிரதானி மேஜர் ஜெனரல் யூசெப் ஹுனைட்டி தெரிவித்துள்ளார். எனினும் ஜோர்தானின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செய்பாடுகளை தடுக்கும்படி கோரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை எகிப்து மற்றும் சவூதி அரேபியா உட்பட பிராந்திய சக்திகள் மன்னர் அப்துல்லாஹ்வுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளன. இஸ்லாமிய அரசுக்கு குழுவுக்கு எதிரான போரில் ஜோர்தானுடன் கூட்டணி சேர்ந்த அமெரிக்காவும் ஜோர்தான் அரசுக்கு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

குறைவான இயற்கை வளங்களைக் கொண்ட நாடாக இருக்கும் ஜோர்தான் கொரோனா தொற்றினால் கடும் பாதிப்பை எதிர்கொண்டிருப்பதோடு உள்நாட்டு யுத்தம் நீடிக்கும் அண்டை நாடான சிரியாவில் இருந்து வரும் அதிக எண்ணிக்கையான அகதிகளுக்கும் தஞ்சம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad