தேசிய ஒளடதங்களை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள் : எமது தேசிய உற்பத்திகளை அழிக்க பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - சிசிர ஜயகொடி - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

தேசிய ஒளடதங்களை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள் : எமது தேசிய உற்பத்திகளை அழிக்க பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - சிசிர ஜயகொடி

(செ.தேன்மொழி)

தேசிய ஒளடதங்களை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக 'சுவதரணி' எனப்படும் பாணத்தை ஆயுர்வேத வைத்திய நிபுணர்கள் அங்கிகரித்துள்ளதாகவும், அதனை அருந்தி பயனை பெற்றுக் கொள்ளுமாறு சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றகரமான நிலையில் இருக்கின்றது. வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்த மட்டத்தில் காணப்படுவதுடன், பெருந்தொகையானவர்கள் குணமடைந்து வருகின்றனர். இதற்கு காரணம் காலகாலமாக இலங்கை மக்கள் பின்பற்றி வந்துள்ள பாரம்பரிய வாழ்க்கை முறையாகும். இதன்போது தேசிய உணவுப் பொருட்களின் பயன்பாடு மற்றும் ஆயுர்வேத வைத்திய முறைகள் என்பன இவர்களுக்கு பெரும் நலனை செய்துள்ளது.

தேசிய மூலிகைகளை பயன்படுத்தி பல்வேறு ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த ஒளடதங்கள் தொடர்பில் துறைசார் வைத்திய நிபுணர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு அவற்றுக்கான அங்கீகாரத்தை வழங்கியதன் பின்னரே அவை பயன்பாட்டிற்கு வருகின்றது.

பொதுவாகவே தொற்று நோய்கள் ஏற்பட்டால், அவற்றிலிருந்து பாதுகாப்பு பெருவதற்கான உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அது வெறுமனே உணவு உட்கொள்ளுவதால் மாத்திரம் முடியாது.

நஞ்சு தன்மையற்ற தேசிய உணவு வகைகளை உட்கொள்வதுடன், தண்ணீர் அருந்துதல், முறையான உணவு பழக்கம், போதியளவான உறக்கம் உள்ளிட்ட விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும். கிருமிகளிடமிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக எமது முன்னோர் பல வழிகாட்களை செய்துள்ளனர். அதனை கடைப்பிடித்தால் எந்தவொரு கிருமியிடமிருந்தும் நாம் தப்பிக் கொள்ள முடியும்.

மேற்கத்தைய ஒளடதங்களுடன் ஒப்பிடுகையில், ஆயுர்வேத ஒளடதங்களை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் குறைவாகவே ஏற்படும். இந்நிலையில், எமது தேசிய உற்பத்திகளை அழிப்பதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் காரணமாகவே நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

எதிர்வரும் காலங்களில் அந்த நிலைமையை மாற்றி அமைக்க வேண்டும். தேசிய உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கமும் ஆர்வமாக உள்ளது. இந்நிலையில் எமது பாரம்பரிய செயற்பாடுகளை யாரும் அலட்சியப்படுத்தக் கூடாது. அவற்றை பயன்படுத்தி நாம் மேலும் நன்மைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad