(எம்.மனோசித்ரா)
ஆளுந்தரப்பிலுள்ள பங்காளி கட்சிகள் தனித்து மே தினக் கூட்டத்தை நடத்திவிடும் என்பதற்காகவும், ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியினர் பாரியளவில் கூட்டங்களை நடத்தி விடுவர் என்ற அச்சத்தின் காரணமாகவே மே தினக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. தொழிற்சங்கம் சார்ந்த இந்த விவகாரத்தை தீர்மானமெடுக்கும் அதிகாரம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் கிடையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதும், ஜனாதிபதியும் ஏனைய அரசியல்வாதிகளும் கிராமங்களுக்குச் சென்று கூட்டங்களை நடத்தும் போதும் கொவிட் அச்சுறுத்தல் ஏற்படவில்லையெனில் மே தினக் கூட்டத்தின் போது மாத்திரம் எவ்வாறு ஏற்படும்?
அரசாங்கத்திலுள்ள பங்காளி கட்சிகள் பிளவடைந்து மே தினக் கூட்டத்தை நடத்திவிடும் என்ற அச்சமே மே தினக் கூட்டங்களை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் கட்டுப்பாடுகளை விதித்து மே தினக் கூட்டங்களை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான தினக் கொண்டாட்டங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளால் தீர்மானிக்க முடியாது.
கூட்டங்கள் நடத்துவதை ஒத்தி வைக்க முடியுமே தவிர, அதனை இரத்து செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது. இது தொழிற்சங்கங்களுடன் தொடர்புடைய விடயமாகும்.
1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுத்த மமதையில் நிலை தடுமாறி சிலர் அநாகரிகமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு நாம் கடும் கண்டனத்தை வெளியிடுகின்றோம்.
அரசாங்கத்திலுள்ள இராஜாங்க அமைச்சரொருவர் இவ்வாறு செயற்படுவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இதுவே இன்று அரசாங்கத்தின் நிலைமையாகும் என்றார்.
No comments:
Post a Comment