பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் : அரசாங்கம் ஏப்ரல் தாக்குதலை ஒரு இனத்தின் மீது சுமத்தியுள்ளது - தம்பர அமில தேரர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 20, 2021

பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் : அரசாங்கம் ஏப்ரல் தாக்குதலை ஒரு இனத்தின் மீது சுமத்தியுள்ளது - தம்பர அமில தேரர்

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஏப்ரல் குண்டுத் தாக்குதல் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றால் அந்த தேவை யாருக்கு இருந்தது என்பதை பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதனை மறைத்துக் கொண்டு இருப்பதனால் உண்மை வெளிப்படப் போவதில்லை என தம்பர அமில தேரர் தெரிவித்தார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஏப்ரல் குண்டுத் தாக்குதல் மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்திருக்கின்றார். 

அரசியல் அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றால் யாருக்கு அந்த தேவை இருந்தது? ஏப்ரல் தாக்குதலால் யார் அரசியல் லாபம் பெற்றுக் கொண்டார்கள் என்பது யாருக்கும் தெரிந்த விடயம்.

அதனால் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் இது தொடர்பாக மறைக்காமல் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இதன் உண்மை தன்மை ஒருபோது வெளிப்படப் போவதில்லை. 

அரசாங்கமும் இந்த தாக்குதலை ஒரு இனத்தின் மீது சுமத்தி, தற்போது இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என ஒருவரை பெயரிட்டிருக்கின்றது. ஆனால் அந்த நபர் கடந்த அரசாங்க காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டவர். இவ்வளவு காலம் கடந்த பின்னர் தற்போது அந்த நபரை பிரதான சூத்திரதாரி என பெயரிட்டிருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. 

அத்துடன் கடந்த அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன மற்றம் ரணில் விக்ரமசிங்க இருவரும் தங்களை அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள இவ்வாறு முயற்சித்தார்களா என யாரும் நினைக்கமாட்டார்கள். ஏனெனில் அந்த அரசாங்கத்தில் இவர்களுக்கிடையில் எவ்வாறான நிலைமை இருந்தது என்பது யாரும் அறிந்த விடயம். 

அப்படியானால் இந்த தாக்குதல் மூலம் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள யார் முற்பட்டிருப்பார்கள் என்பதை பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad