வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்குள் வீசப்பட்ட மர்மப் பொதி - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்குள் வீசப்பட்ட மர்மப் பொதி

(செ.தேன்மொழி)

வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெண் கைதிகளின் பிரிவுக்கு எரியப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியை கைப்பற்றிய சிறைச்சாலை அதிகாரிகள், அதனை மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஆணையாளர் (புனர்வாழ்வு மற்றும் நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் கைதிகளின் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் அனைவரும் தற்காலிகமாக அகற்றப்பட்டிருந்ததுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் அவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பகுதிக்கு தற்போது தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகள் எரியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இத்தகைய பொருட்கள் அடங்கிய பொதிகள் சிறைச்சாலைக்குள் எரியப்படுவதை தடுக்கும் வகையில் சிறைச்சாலை மதில்களுக்கு மேல் பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டுள்ளது.

எனினும் நேற்று இரவு 11.45 மணியளவில் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று எரியப்பட்டுள்ளதுடன், இந்த பொதி பாதுகாப்பு வலையில் சிக்குண்டிருந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அதனை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, இந்த பொதியிலிருந்து 9 தொலைபேசிகளும், 5 சிம் அட்டைகளும், 14 தொலைபேசி மின்கலங்கள், 8 தொலைபேசி மின் ஏற்றிகள், 10 புகையிலைகள், 20 வெற்றிலைகள், 2 தீபெட்டிகள், பாக்கு, சுண்ணாம்பு உள்ளிட்ட பல்வேறு தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad