மட்டக்களப்பில் போதைப் பொருளுக்கு அடிமையாகிய இளைஞர் குழு - பணத் தேவைக்காக வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த 6 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

மட்டக்களப்பில் போதைப் பொருளுக்கு அடிமையாகிய இளைஞர் குழு - பணத் தேவைக்காக வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த 6 பேர் கைது

மட்டக்களப்பில் போதைப் பொருளுக்கு அடிமையாகிய இளைஞர் குழு ஒன்று போதைப் பொருள் வாங்குவதற்கு பணத் தேவைக்காக வீடுகளை உடைத்து சேவல், கோழி தொடக்கம் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த 6 இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து ஹரோயின் போதைப் பொருள் மற்றும் கொள்ளையிட்ட கோழிகள் உட்பட பல பொருட்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் வீடுகள் உடைத்து கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றதுடன் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நாவற்கேணி, இருதயபுரம், ஊறணி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 18, 21, 19, 20, 24, 41 வயதான 6 பேரை இன்று செவ்வாய்க்கிழமை (06) ஹரோயின் போதைப் பொருளுடன் 4 பேரையும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 2 பேர் உட்பட 6 கைது செய்ததுடன் இவர்கள் வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட சேவல் கோழிகள், மரப்பலகைகள் சீவும் மற்றும் வெட்டும் இயந்திரம், மாபிள் வெட்டும் இயந்திரம், 5 ஜபோன்கள், பென்ரைவர், என்பனவற்றை மீட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதுடன் தினமும் போதைப் பொருளை 2 ஆயிரம் ரூபா வரை பணம் செலுத்தி வாங்கி பாவித்து வந்துள்ளதாகவும் போதைப் பொருளுக்கு அடிமையாகிய நிலையில் அதனை வாங்குவதற்கு பணத் தேவைக்காக நீண்ட காலமாக வீடுகளை உடைத்து 3 அரைப்பவுண் தங்கச் சங்கிலி ஒன்று மற்றும் அங்கிருக்கும் சிறிய பொருட்கள் தொடக்கம் பெரிய பொருட்கள் வரை கொள்ளையிட்டு அந்த பொருட்களை விற்பனை செய்து அந்த பணத்தில் போதைவஸ்து வாங்கி பாவித்து வந்துள்ளனர்.

இதில் திருடப்பட்ட தங்கச் சங்கிலி விற்பனை செய்து அந்த பணத்தில் போதைப் போருள் வாங்கியுள்ளதாகவும். போதைப் பொருளை பாவித்துவிட்டு பிரதேசத்தில் வீதிகளில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் போதைப் பொருள் மற்றும் வீடுடைப்பு கொள்ளையுடன் 6 பேரும் ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரைணையில் தெரியவந்துள்ளதுடன் திருடப்பட்ட தங்கச் சங்கிலி மீட்கப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad