அரசாங்கத்தின் நடவடிக்கை நாட்டின் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகும் : தற்போது அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

அரசாங்கத்தின் நடவடிக்கை நாட்டின் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகும் : தற்போது அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் செயற்பட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை அடக்க முற்படக்கூடாது. அரசாங்கத்தின் இந்த நிலைமை நாட்டின் ஜனநாயகத்திக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.

அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அடக்கி அச்சுறுத்துவதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் செயற்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாயை மூட முயற்சிக்கின்றது. யாராவது தவறு செய்திருந்தால் அவர்களை கைது செய்ய அல்லது விசாரணைக்கு அழைப்பதற்கு நாட்டில் முறையான சட்டம் இருக்கின்றது. அதன் பிரகாரமே செயற்பட வேண்டும். மாறாக மனிதாபிமானமற்ற முறையில் செயற்படக்கூடாது. 

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டிருப்பது ஏப்ரல் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக் கொண்டாகும். ஆனால் ஏப்ரல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ரஷாத் பதியுதீன் பொறுப்புக்கூற வேண்டியவராக தெரிவிக்கபட்டிருக்கவில்லை.

அத்துடன் ஏப்ரல் தாக்குதல் தொடர்பான பல தகவல்களை பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார, ரிஷாத் பதியுதீன் போன்றவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை செய்ய வேண்டியது குற்றப்பு லனாய்வு துறையின் பொறுப்பாகும்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கார்த்தினல் மெல்கம் ரன்ஜித்தும் தெரிவித்திருக்கின்றார். மாறாக அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாயை மூடிவிட, முயற்சிக்கக்கூடாது. 

அத்துடன் தற்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமல்ல, மதத் தலைவர்கள் ஊடகவியலாளர்களுக்கும் அவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது இலங்கையின் ஜனநாயகத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாகும். இது நாட்டின் சாதாரண மக்களின் உரிமைக்கு விடுக்கப்படும் அச்சறுத்தலாகும்.

அதனால் இந்த பாரிய நிலைமையை நாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எமது சந்ததியினருக்கு நாங்கள் அடிமைத்தனமான எதிர்காலத்தையே உரிமையாக்க நேரிடும். இவ்வாறான பழிவாங்கும் அரசியல் கலாசாரத்தை நாங்கள் இல்லாமலாக்கவேண்டும். இந்த நிலைமை தொடருமானா நாட்டின் எதிர்காலத்துக்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

No comments:

Post a Comment