(செ.தேன்மொழி)
பண்டாரகம - பொல்கொட பகுதியில் அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்கொட பகுதியில் அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு பண மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நேற்று வியாழக்கிழமை பண்டாரகம பகுதியில் நேர்முகப் பரிச்சையொன்றை நடத்தியுள்ளதுடன் இதன்போதே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
தெஹிவலை மற்றும் பட்டகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 96 வெளிநாட்டு பயண பற்றுச்சீட்டுக்களும், ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 390 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவரும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து இதற்கு முன்னரும் இவ்வாறு பண மோசடிகளில் ஈடுபட்டுவந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment