பிரதமர் மஹிந்த தலைமையில் கூடிய பங்காளிக் கட்சிகள் எடுத்த தீர்மானம் இதுதான் - பெரும்பாலான தலைவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, April 19, 2021

பிரதமர் மஹிந்த தலைமையில் கூடிய பங்காளிக் கட்சிகள் எடுத்த தீர்மானம் இதுதான் - பெரும்பாலான தலைவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை வெகுவிரைவில் எடுக்கவும், மே தின கூட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகள் அனைத்து ஒன்றிணைத்து நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான பங்காளி கட்சிகளின் தலைவர்கள் பிரதமருடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. கூட்டணி, மற்றும் அரசாங்கத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து தனிப்பட்ட முறையில் கலந்துரையாட பிரதமரிடம் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் அனுமதி கோரியுள்ளார்கள்.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் சுதந்திர கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ், நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கலந்து கொண்டனர். 

பங்காளி கட்சியின் முக்கிய தரப்பினர்களாக கருதப்படும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவில்லை.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று காலை அலரி மாளிகையில் இடம் பெற்றது. இப்பேச்சுவார்த்தையில் பங்காளி கட்சிகளின் முன்னிலை கட்சி தலைவர்களில் பெரும்பாலானோர் கலந்து கொள்ளவில்லை.

மாகாண சபைத் தேர்தல் முறைமை, மே தினக் கூட்டம், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் கல்ந்தாலோசிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்காளி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

மாகாண சபைத் தேர்தல் முiறைமை குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் முன்வைத்த அமைச்சரவை யோசனை குறித்து இப்பேச்சுவார்த்தையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இந்த யோசனையில் சிறு கட்சிகளின் பாராளுமன்ற பிரவேசம் மட்டுப்படுத்தப்படும் என கூட்டணியின் 1 1 பங்காளி கட்சிகள் ஆரம்பத்தில் எதிப்பு தெரிவித்தார்கள்.

மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து கட்சி தலைவர்களினதும், பாராளுமன்றத்தை அங்கிகரிக்கும் அனைத்து கட்சித் தலைவர்களின் யோசனைகளை பெற்று ஒரு பொது தீர்மானத்தை எடுப்பது அவசியமாகும். இவ்விடயம் குறித்து கட்சித் தலைவர்கள் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து இம்முறை மே தின கூட்டத்தை நடத்துவது அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாலும், சட்ட மூலத்திற்கு அமைச்சரவை முழுமையான அங்கிகாரம் வழங்கியதாலும் அவ்விடயம் குறித்து பேசப்படவில்லை எனவும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன இவ்விடயங்கள் குறித்து பிரதமருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க எதிர்பார்த்திருந்தோம். இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் என 50 ற்கும் மேற்பட்ட புதிய தரப்பினர்கள் பலர் வருகை தந்திருந்தார்கள்.

இவ்வாறான நிலையில் எதிர்பார்த்த விடயங்களை பிரதமருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை; அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண்பது அவசியம். என்பதால் தனிப்பட்ட முறையில் பிரதமருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க அனுமதி கோரியுள்ளோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

பிரதமருக்கும் பங்காளி கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்க்கமான தீர்மானங்கள் ஏதும் எடுக்கப்படவில்லை. பல கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. ஆகவே ஒரு பேச்சுவார்த்தையின் ஊடாக முரண்பாடுகளுக்கு தீர்வு பெற முடியாது. தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஷ் தெரிவித்தார்.

பிரதமர் தலைமையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஆளும் கட்சிக்கும், பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறும் ன எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவ்வித தீர்மானங்களுமின்றிய வகையில் நேற்றைய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது

No comments:

Post a Comment