கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பாராளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு - அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு அறிக்கை மீது இரண்டு நாள் விவாதம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 19, 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பாராளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு - அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு அறிக்கை மீது இரண்டு நாள் விவாதம்

(ஆர்.யசி)

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தீர்மானம் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதனால் பாராளுமன்ற விவாதத்தை நடத்த வேண்டாம் என பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டியுள்ளனர்.

அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான இரண்டு நாட்கள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடத்தவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

விசேட பொருளாதார வலயமொன்ரின் தாபிப்புக்கென ஏற்பாடு செய்வதற்கும், பதிவு செய்தல்கள், உரிமங்கள், அதிகாரவளிப்புகள் மற்றும் வேறு அங்கீகாரங்களை அளிப்பதற்கும் அத்தகைய வலயத்திலும் வலயத்தில் இருந்தும் வியாபாரங்களையும் வேறு செயற்பாடுகளையும் கொண்டு நடாத்துவதற்கும் தட்துவமளிக்கப்பட்ட ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கான சட்டமூலமொன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில் இது குறித்து தற்போது பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று கூடவிருந்த பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று அவசரமாக கூட்டப்பட்டதுடன் இந்த விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய வேளையில் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு குறித்து நாளையதினம் எடுக்கவிருந்த விவாதத்தை ஒத்திவைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு தீர்மானம் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதனால் பாராளுமன்ற விவாதத்தை நடத்த வேண்டாம் என பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டியுள்ளனர்.

இன்றையதினம் வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான 5 ஒழுங்கு விதிகளும், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு அறிவித்தல்களும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 11 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு கேள்விகளுக்கு பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதான முன்வைக்கும் கோட்டே நகர எல்லைப் பகுதி தொடர்பான சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ள விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமாயச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், பிற்பகல் 4.30 மணிமுதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரு கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், 4.50 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதமும் நடைபெறும்.

அதேபோல் அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதம் நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அது உள்வாங்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த விவாதத்தை இரு நாட்கள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக கொண்டுவந்து எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இரண்டு நாட்கள் விவாதமாக நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையையும் அரசாங்கமே கொண்டு வருகின்றது. 

அன்றையதினம், பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்காது முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ. சுமந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment